"அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு பலனளிக்கும்" சித்தூர் - தட்சூர் ஆறு வழிச்சாலை: சுற்றுச் சூழல்துறை அனுமதி!

"அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு பலனளிக்கும்" சித்தூர் - தட்சூர் ஆறு வழிச்சாலை: சுற்றுச் சூழல்துறை அனுமதி!
Published on
Updated on
2 min read

பெரும் எதிர்ப்புகளுக்கு இடையேயும் சித்தூர் - தட்சூர் ஆறு வழிச்சாலை அமைக்கும் திட்ட முதற்கட்ட பணிகளுக்கு மத்திய அரசு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது.

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்திலிருந்து தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தட்சூர் வரைக்குமான 126 கிலோமீட்டர் தூரத்திற்கு NH - 716B நெடுஞ்சாலையில் ஆறு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு வடக்கேயுள்ள மாநிலங்களிலிந்து சென்னைக்கு அருகிலுள்ள எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் வேகமாகவும் நெரிசலின்றியும் வருவதற்காக இச்சாலை அமைக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்தச் சாலை ஆந்திராவில் 82 கிலோமீட்டரும் தமிழ்நாட்டில் 44 கிலோமீட்டர் தூரமும் பயணிக்கவுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரில் தொடங்கும் இந்தச் சாலை ஸ்ரீரங்கராஜபுரம், நகரி, விஜயாபுரம் வழியே தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தின் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வழியாக தட்சூரில் ஏற்கெனவே சென்னை சுற்றுவட்டச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் இணைகிறது.

கடந்த 2018 முதல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் இந்த ஆறு வழி சாலை திட்டத்திற்கு சட்டப்படி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகதாகவும் தெரிவித்திருந்தார்

மேலும், இச்சாலையால் அதானியின் காட்டுப்பள்ளித் துறைமுகத்திற்குத் தான் பலன் கிடைக்குமே தவிர விவசாயிகளுக்கு எவ்வித பலனும் கிடையாது என்ற எதிர்ப்பும் எழுந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இத்திட்டத்திற்கான முதற்கட்ட திட்ட பணிகளை துவக்குவதற்கான சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம் நெடியம் காப்புக்காட்டில் 10.6103 ஹெக்டர் வனப்பகுதி மற்றும் திருமலைராஜூபேட்டை காப்புகாட்டில் 3.4186 ஹெக்டர் பகுதியில் அமைக்கப்பட உள்ள சித்தூர் முதல் தட்ச்சூர் ரோடு வரையில் 6 வழி சாலை அமைப்பதற்கு திருவள்ளூர் வன பகுதிகளில் 14.029 ஹெக்டோர் வன நிலம் மாற்றுப் பாதைக்காக முதற்கட்ட பணிகளுக்காக வனத்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பிட்டு அறிக்கை அடிப்படையில் சித்தூர் முதல் தட்சூர் வரையிலான ஆறு வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com