அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான காலியிடங்களை தமிழக அரசே நிரப்பிக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென தொடர்ச்சியாக மத்திய அரசை வலியுறுத்தி வருவதாகவும், அனுமதி கிடைக்காவிட்டால், சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மாசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
வரும் 4 ஆம் தேதி காலை, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஹெல்த் வாக் சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த பின்னர், நடை பயிற்சி மேற்கொள்ள உள்ளார். இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வட கிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் நோய் தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளதாகவும், டெங்குவை பொறுத்தவரை தமிழகத்தில் அதீத கட்டுபாட்டில் இருக்கிறது என்றும், அடுத்த இரண்டு மாதங்கள் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான காலியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ள நிலையில், அவற்றை தமிழ்நாடு அரசே நிரப்பிக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென, தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருவதாகவும், இது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆராய்ந்து சட்டரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அக்டோபர் மாதம் 29 தேதி துவங்கி டிசம்பர் 31 தேதி வரை 10 வாரங்களில் ஆயிரம் இடங்களில் மழை கால சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக கூறினார்.