சோகத்தில் முடிந்த கல்வி சுற்றுலா.....

சோகத்தில் முடிந்த கல்வி சுற்றுலா.....

ஆர்.எஸ்.மங்கலம் தனியார் பள்ளி மாணவன் கல்வி சுற்றுலா சென்ற இடத்தில் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.  தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கல்வி சுற்றுலா:

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளியில் பயிலும் சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த 10-ஆம் தேதி அன்று இரவு புறப்பட்டு கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆழியார்  பகுதிக்கு கல்வி சுற்றுலா சென்றுள்ளனர்.  

நீரில் மூழ்கி..:

இந்நிலையில் நேற்று காலையில் அந்த தனியார் பள்ளி மாணவர்கள் ஆழியார் அணையின் கீழ் பகுதியில் உள்ள தடுப்பணையில் குளித்துக் கொண்டு இருந்தபோது அப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் லோகசுதன் (17) என்பவர் திடீரென புதைமணலுடன் கூடிய ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.  

சிகிச்சைக்காக..:

அப்போது சக மாணவர்கள்  கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் அந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு மாணவன் லோகசுதனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  அதன்பிறகு இறந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் செட்டியமடை பகுதியில் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

போராட்டம்:

ஆழியார் தடுப்பணையில் அரசால் தடை செய்யப்பட்ட பகுதியில் பள்ளி மாணவர்களை குளிக்க அனுமதித்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும்,  மாணவர்கள் மீது அக்கறையின்றி செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

விசாரணை:

தகவல் அறிந்து வந்த திருவாடானை DSP (பொறுப்பு) ராஜா தலைமையிலான போலீசார் சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு சென்று இந்த சம்பவம் தொடர்பாக அந்த பள்ளி நிர்வாகத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    

இதையும் படிக்க:    ராஜினாமாக்களும்.... இடமாற்றங்களும்... நியமனங்களும்....