பாஜகவை ஓரம் கட்ட நினைக்கும் எடப்பாடி...!!!

பாஜகவை ஓரம் கட்ட நினைக்கும் எடப்பாடி...!!!
Published on
Updated on
2 min read

பாஜகவில் இருந்து ஆட்களை இழுத்து கட்சியை வளர்க்கும் நிலைக்கு திராவிட கட்சிகள்  தள்ளப்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்த நிலையில் அதற்கு அதிமுக கடும் எதிர்விணை ஆற்றியுள்ளது.  நோட்டாவை விட குறைந்த வாக்கு  பெற்ற பாஜக இவ்வாறு கூறுவது  நகைப்பிற்குரியது என அதிமுக விமர்சித்துள்ளது.

தொடர் விலகல்:

அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றது முதல் சலசலப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது தமிழ்நாடு.  பாஜக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி பகிரங்கமாக குற்றம் சாடிய பா.ஜ.க. நிர்வாகி காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து வெளியேறினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராகி விட்டார் அண்ணாமலை. 

அந்த வகையில் மாநில பா.ஜ.க.வின் ஐ.டி. விங் தலைவராக இருந்த சிடிஆர். நிர்மல் குமார்,திடீரென பா.ஜ.கவில் இருந்து விலகியதுடன், மாநில தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். 

அவரை தொடர்ந்து பா.ஜ.க. ஐ.டி.விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் அடுத்ததாக கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.  அவருடன் ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஜோதி உள்ளிட்ட நிர்வாகிகள் சிலரும் அதிமுகவில் இணைந்தனர். 

அதிமுக விமர்சனம்:

இந்த இணைப்பு விழாவுக்கு இடையே கூட்டணி கட்சியான அதிமுக இப்படி செய்யலாமா என தமிழ்நாடு பா.ஜ.க.வின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் கேள்வி எழுப்பி இருந்தார்.  அத்துடன் ஈபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்து பதிவிட்டார்.

பயப்படமாட்டேன்:

இந்நிலையில், பா.ஜ.க. நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் ஐக்கியம் ஆகி வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை,  பாஜகவில் இருந்து ஆளை இழுத்து திராவிட கட்சிகளை வளர்க்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளதாக விமர்சித்தார். தமிழ்நாட்டில்  பா.ஜ.க. வளர்ந்துள்ளதாகவும் மேலும், தான் யாருக்கும் பயப்பட மாட்டேன்,  என்றும் துணிந்து முடிவெடுப்பதில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.  டெல்லி  சொல்வதை எல்லாம் தன்னால் கேட்க முடியாது என்றும் ஆவேசமாக தெரிவித்தார் அண்ணாமலை. 

அதிமுக கண்டனம்:

இந்நிலையில், நிர்வாகிகள் வெளியேறுவதை மறைப்பதற்காக அதிமுகவை விமர்சிப்பதா என அண்ணாமலைக்கு அதிமுக ஐடி பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது.  நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற கட்சி  பா.ஜ.க என்றும்  அதிமுக குறிப்பிட்டுள்ளது.  தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வென்ற இயக்கம் அதிமுக என்றும் அதிமுக ஐ.டி.விங் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

எதிர்ப்பு:

முன்னதாக  தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப் படத்தை எரித்து பாஜக இளைஞர் அணியினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். 

காரணம் என்ன?:

இந்த வார்த்தை  மோதல் மூலம் பாஜக அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் அதிமுகவிடம் அதிக  தொகுதிகளை கேட்டு பேரம் பேச இது போன்ற யுக்தியை பாஜக பயன்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  அதே நேரத்தில் பாஜகவை கூட்டணியில் இருந்து  ஓரம்கட்ட  எடப்பாடி அணி முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com