கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 10ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 131 இடங்களிலும், பா.ஜ.க 66 இடங்களிலும், ஜனதா தளம் 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 131 இடங்களில் முன்னிலையில் உள்ளதால் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது.
பா.ஜ.க அமைச்சர்களும் படுதோல்வி
இந்த தேர்தல் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். குறிப்பாகப் பிரதமர் மோடி 40 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பேரணியாகச் சென்று பிரச்சாரம் செய்தார்.இருப்பினும் 40% ஊழல், கிஜாப் தடை, இஸ்லாமியர் இட ஒதுக்கீடு ரத்து மற்றும் மதபிரிவினை போன்ற பா.ஜ.கவின் அரசியலை இந்த தேர்தலில் கர்நாடக மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். மேலும் இந்த தேர்தலில் அதிகமான இடங்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் பா.ஜ.க அமைச்சர்களும் படுதோல்வி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க | ஃபர்ஹானா இஸ்லாமிர்யர்களுக்கு எதிரான படம் இல்லை!!!!
மேலும் கர்நாடகத்தில் ஆட்சியை இழந்துள்ளதால் தென்னிந்தியாவில் இருந்த ஒரு மாநிலத்தையும் பா.ஜ.க இழந்துள்ளது. தென் மாநிலங்களில் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என பா.ஜ.க தலைவர்கள் கூறிய நிலையில் தற்போது தென் மாநிலத்தில் பா.ஜ.க முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சி - கர்நாடகாவில் எதிரொலி
இந்நிலையில் திராவிட மாடல் ஆட்சி நாடு முழுவதும் வரும் என முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் அது முதலில் கர்நாடகாவில் எதிரொலித்துள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி நாடு முழுவதும் வரும் என தெரிவித்து உள்ளார். அது கர்நாடகாவில் தற்போது எதிரொலித்து உள்ளது.நாடாளுமன்றத் தேர்தலிலும் இது எதிரொலிக்கும்" என தெரிவித்துள்ளார்.