மாமுல் வாங்குவதில் காவலர்களிடையே தகராறு.... இணை ஆணையருக்கு வந்த மொட்டை கடிதம்!!!

மாமுல் வாங்குவதில் காவலர்களிடையே தகராறு.... இணை ஆணையருக்கு வந்த மொட்டை கடிதம்!!!
Published on
Updated on
2 min read

மாமூல் வசூலிப்பதில் நுண்ணறிவு பிரிவு காவலர்களிடையே தகராறு, காவல் அதிகாரிகளுக்கு மொட்டை கடிதத்தை அனுப்பிய நுண்ணறிவு பிரிவு காவலரால் பரபரப்பு.

குற்றச்சாட்டு:

சென்னை கே.கே நகர் காவல் நிலையத்தில் லெவல் 1 நுண்ணறிவு பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் கந்தசாமி.  இவர் தி நகர் காவல் மாவட்டங்களில் உள்ள குட்கா வியாபாரிகள்,  மசாஜ் சென்டர் உரிமையாளர்கள், சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் மாமூல் பெற்று சட்டவிரோத செயல்கள் நடத்த அனுமதி கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது.  இந்த துறைரீதியான விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியானது. 

விலாசம் இல்லா கடிதம்:

அதாவது கடந்த சில மாதங்களாகவே காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி ஆகிய அதிகாரிகளுக்கு பெயர், விலாசம் இல்லாத கடிதம் ஒன்று வந்துள்ளது.  அந்த கடிதத்தில் தி.நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் லெவல் 2 நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் மணிமாறன் உட்பட பல லெவல் 2 காவலர்கள் மாதந்தோறும் 3000 ரூபாய் மாமூல் வசூலித்து வருவதாகவும், வசூல் செய்த பணத்தை உயரதிகாரிகள் வரை பங்கு பிரித்து கொள்வதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது.   

கடிதத்தில்...:

மேலும் தி.நகர் காவல் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களை மிரட்டி பணம், 3 வேளை உணவு , வாங்கி செல்கின்றனர்.  மேலும் காவல் நிலையங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை இணை ஆணையருக்கு தெரிவிக்காமல் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுடன் சேர்ந்து சட்டத்திற்கு புறம்பாக மாமூல் வசூல் செய்து வருகின்றனர். இவ்வாறு நுண்ணறிவு பிரிவு காவலர்கள் மீதான குற்றச்சாட்டில் ஆய்வாளர் மணிமாறன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாதம் மாதம் மாமுல் வாங்கி கொண்டு அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். 

இதனால் காவலர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும், உடனடியாக லெவல்2 நுண்ணறிவு பிரிவை கலைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 

மேலும் தாம்பரம், ஆவடி போன்ற காவல் ஆணையரகத்தின் கீழ் லெவல் 2 கிரேடு இல்லையெனவும் சென்னையில் மட்டும் தான் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

நடவடிக்கை:

உடனடியாக சம்மந்தப்பட்ட ஆய்வாளர், லெவல் 2 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் சமூக ஆர்வலர் சவுக்கு சங்கரிடம் தகவல் கொடுக்கப்பட்டு சமூக வலைதள பக்கத்தில் பதிவிட படும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கடிதம் அனுப்பியவர்:

இக்கடிதத்தை கண்டு அதிர்ச்சியடைந்த உயரதிகாரிகள் உடனடியாக கடிதம் அனுப்பப்பட்ட நபர்கள்  குறித்து விசாரணை நடத்திய போது, கடிதம் ஆலந்தூர் தபால் நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  பின்னர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மகேஷ் என்ற நபர் கடிதத்தை அனுப்பியதும் தெரியவந்தது. 

விசாரணை:

அவரை பிடித்து விசாரிக்கும் போது கே.கே நகர் காவல் நிலையத்தில் லெவல்1 நுண்ணறிவு பிரிவு காவலர் கந்தசாமியின் உறவினர் இவர் என்பதும் காவலர் கந்தசாமி கடிதம் ஒன்றை கொடுத்து தபால் அனுப்புமாறு கூறியதால் அனுப்பியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். 

பின்பு காவலர் கந்தசாமியிடம் விசாரித்த போது, தி.நகர் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் கன்னியப்பன் கடிதத்தை அனுப்புமாறு தெரிவித்துள்ளார். 

இணை ஆணையர் உத்தரவு:

இந்த விசாரணை நடந்து வரும் வேளையில், காவலர் கந்தசாமிக்கும், ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவலர் கந்தசாமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

காரணம் என்ன?:

மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், முன்னதாக லெவல் 1 நுண்ணறிவு பிரிவில் உள்ள சில காவலர்கள் அங்குள்ள கடைகளில் மாமூல் வசூலித்து பங்கு பிரித்து கொண்டதும், லெவல் 2 பிரிவு உருவாக்கப்பட்டதிலிருந்து கடைகளில் வாங்கும் மாமூல் இரு பிரிவுகளுக்கு செல்வதால் ஆத்திரமடைந்து லெவல் 1 காவலர்களை பற்றி கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com