அரிக்கொம்பனை ரவுடியாக சித்தரித்து செய்தி வெளியிட தடைக்கோரிய மனு தள்ளுபடி!

அரிக்கொம்பனை ரவுடியாக சித்தரித்து செய்தி வெளியிட தடைக்கோரிய மனு தள்ளுபடி!
Published on
Updated on
1 min read

அரிக்கொம்பன் யானையை ரவுடியாக சித்தரித்து செய்தி வெளியிட தடைக்கோரிய மனுவை  தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் இருந்து தமிழகத்தின் கம்பம் பகுதிக்கு வந்த அரிக்கொம்பன் யானையை பிடித்த வனத்துறையினர், அதனை திருநெல்வேலி மாவட்டத்த்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் விட்டுள்ளனர்.

அங்கு போதுமான உணவு, தண்ணீர் இல்லை என்பதால், மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விடக் கோரி கேரளாவைச் சேர்ந்த ரெபெக்கா ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.   அந்த மனுவில், அரிக்கொம்பன் யானையை ரவுடி யானை போல இழிவாக சித்தரித்து செய்திகள் வெளியிடப்படுவதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, களக்காடு - முண்டந்துறையில் யானை நலமாக உள்ளதாகவும், அதன் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், யானையை எங்கு விட வேண்டும் என முடிவு செய்ய வனத்துறையினரே நிபுணத்துவம் பெற்றவர்கள் எனவும், இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என்றும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

அப்போது, ஊடகங்களில் யானையை ரவுடி யானை என செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வைத்த கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்திய பிரஸ் கவுன்சில் மற்றும் ஊடகங்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்து வழக்கு தொடரலாம் எனவும் இந்த வழக்கில் பொதுப்படையான உத்தரவை பிறப்பிக்க முடியாது எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com