ஒரே ஆணையில் 560 பேர் பணி நீக்கம்...கேள்வி எழுப்பிய பாமக நிறுவனர்...மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தல்!

ஒரே ஆணையில் 560 பேர் பணி நீக்கம்...கேள்வி எழுப்பிய பாமக நிறுவனர்...மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தல்!
Published on
Updated on
1 min read

வட்டார வள அலுவலர்களை பணி நீக்கம் செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர்  ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்யும் மாவட்ட வள அலுவலர்கள், வட்டார வள அலுவலர்கள் என 560 பேரை ஒரே அரசாணை மூலம் தமிழக அரசு பணி நீக்கம் செய்தது. இந்த பணி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை தணிக்கை செய்வதற்காக கடந்த 2014 - 15 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட 560 மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்களை ஒரே அரசாணை மூலம் பணி நீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்கு மாற்றாக புதிய மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து ஆணை பிறப்பித்திருக்கிறது. 9 ஆண்டுகளாக மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றியவர்களை நீக்கி விட்டு, புதியவர்களை அமர்த்துவது அப்பட்டமான சமூக அநீதி என்று விமர்சித்துள்ளார்.

இவர்களை பணி நீக்கம் செய்வதற்கு காரணத்தை சுட்டிக்காட்டியவர், 6 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாதது மற்றும் மத்திய அரசிடம் இருந்து நிதி வராததைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு 9 மாத ஊதியம் வழங்கப்படாமல் இருந்ததால், அவர்கள் முதலமைச்சரிடம் முறையிட்டு அந்த ஊதியத்தை பெற்றனர். இதனால் வட்டார வள அலுவலர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை உயரதிகாரிகளுக்கும் ஏற்பட்ட மோதலே, இந்த பணி நீக்கத்தில் முடிந்திருப்பதாக குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, பணி நிலைப்பு செய்யப்பட வேண்டியவர்களை பணிநீக்கம் செய்வது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பிய ராமதாஸ், பணி நீக்கம் செய்தது தொடர்பான அரசாணையை ரத்து செய்துவிட்டு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை  மீண்டும் பணியில் அமர்த்துமாறு தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com