திண்டுக்கல் அருகே பட்டா மாறுதலுக்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு காலணி அணிந்து சென்ற மாற்று திறனாளி பெண்ணை கிராம நிர்வாக அலுவலர் கீழே பிடித்து தள்ளியதாக உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
திண்டுக்கல் அருகே உள்ள கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தராம்பாள். மாற்று திறனாளியான சுந்தராம்பாள் மாற்றுத்திறனாளிகள் அணியும் காலனியை அணிந்து கொண்டால் மட்டுமே நடக்க முடியும்.
இதற்கிடையே இவருக்கு சொந்தமான நிலம் குஜிலியம்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட வடுகம் பட்டி கிராமத்தில் உள்ளது. இந்த நிலம் கூட்டு பட்டாவில் இருப்பதன் காரணமாக நிலத்தின் உரிமையாளர் சுந்தராம்பாள் தனக்கு தனிப்பட்டா ஏற்படுத்தி வழங்க கோரி வருவாய்த் துறையினரிடம் மனு அளித்திருந்தார்.
ஆனால் இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இருப்பினும், தொடர்ந்து சுந்தராம்பாள் வடகம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு பலமுறை நேரில் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாரை சந்தித்து தனக்கு தனிப்பட்டா வழங்க கோரி மனு அளிக்க சென்றார்.
மாற்றுத்திறனாளி என்பதினால் தான் அணிந்திருந்த காலணியுடன் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் அந்த பெண் உள்ளே சென்றபோது, பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் காலனியை கழட்டி வெளியே வைத்து விட்டு உள்ளே வரவும் என கண்டித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அந்தப் பெண் தான் மாற்றுத்திறனாளி என்னால் காலனி அணியாமல் நடக்க இயலாது என்று கிராம நிர்வாக அலுவலரை வற்புறுத்தவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், சுந்தராம்பாளை கீழே தள்ளிவிட்டுள்ளார். அப்போது உடன் சென்ற அந்த பெண்ணின் உறவினர்கள் கிராம நிர்வாக அலுவலர் வாக்குவாதத்தில் ஈடுபடவே ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் சுந்தராம்பாள் செய்தியாளர்களிடம், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உயர்சாதி என்பதினால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார், நானும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் என்னை பிடித்து கீழே தள்ளி விட்டார், என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனது உறவினருடன் வந்த சுந்தராம்பாள் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
இதையும் படிக்க: பணம் பறிக்க வந்த போலி செய்தியாளர்கள் கைது!