கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரம் படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் டெல்லிக்கு சென்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த முதலமைச்சர், கிண்டியில் அமையவுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு நேரில் அழைப்பு விடுத்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் அழைப்பினை ஏற்று, சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதாக முன்னர் குடியரசு தலைவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தெரிந்துகொள்க: குடியரசுத் தலைவரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
அதனை தொடர்ந்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவிலும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் குடியரசுத்தலைவரின் வேறு பணிகள் காரணமாக ஜூன் 5 ஆம் தேதி வருவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 5 ஆம் தேதிக்குப் பதிலாக, குடியரசுத் தலைவர் அளிக்கும் வேறு தேதியில், மருத்துவமனை திறப்பு விழா நடைபெறும் என்ற தகவல் தற்போது தமிழக அரசு தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: கட்டிட கழிவுகளை சாலையில் கொட்டினால் கடும் நடவடிக்கை...!!