”நாங்கள் இருவரும் இணைந்திருப்பது...கட்சியை தொண்டர்களின் கையில் கொடுப்பதற்காகவே” - டிடிவி

”நாங்கள் இருவரும் இணைந்திருப்பது...கட்சியை தொண்டர்களின் கையில் கொடுப்பதற்காகவே” - டிடிவி
Published on
Updated on
1 min read

தான் பதவி ஏற்ற 3 மாதத்தில்  கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் பங்கேற்றார். 

ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 30 மாதங்கள் கடந்தும் கொடநாடு வழக்கு ஆமை வேகத்தில் நடைபெறுவதாக விமர்சித்தார். இந்த வழக்கை விசாரித்து குற்றவாளிகள் யார் என்பதையும் அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதையும் மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். கொடநாடு வழக்கு விசாரணை மேலும் தாமதமானால், தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து,  ஓ.பன்னீர் செல்வம் , டிடிவி தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கொடநாடு வழக்கில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று முழக்கமிட்டனர். முன்னதாகப் பேசிய அமமுக பொதுச் செயலாளர் தினகரன், கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.  தாங்கள் இருவரும் இணைந்துள்ளது சுயநலத்திற்காக இல்லை என்றும், எம் ஜி ஆர் உருவாக்கிய கட்சியை தொண்டர்களின் கையில் கொடுப்பதற்காகவே ஒன்றிணைந்திருப்பதாகவும் கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com