1966 ஆம் ஆண்டு காமராஜர் வீட்டிற்கு டெல்லியில் ஜன சங்கத்தை சேர்ந்தவர்கள் தீ வைத்த போது அங்கு திமுக தொண்டன் கோதண்டபானி என்பவர் வீட்டுக்குள் சென்று காமராஜரை காப்பாற்றியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியுள்ளார்.
திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் தி.மு.க முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில்,
பாஜக தலைவர் அண்ணாமலை, "முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிரதமர் ஆவதை திமுக தடுத்தது" என்று கூறியதற்கு மறுப்பு தெரிவித்த அவர், காமராஜர் பிரதமர் பதவியை விரும்பவில்லை, நேருவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருத்தர் பிரதமராக வரவேண்டும் என அடையாளம் காட்டியவர் காமராஜர் என தெரிவித்தார்.
மேலும், 1966 ஆம் ஆண்டு காமராஜர் வீட்டிற்கு டெல்லியில் ஜன சங்கத்தை சேர்ந்தவர்கள் தீ வைத்த போது அங்கு திமுக தொண்டன் கோதண்டபானி என்பவர் வீட்டுக்குள் சென்று காமராஜரை காப்பாற்றியதாக நினைவு கூர்ந்த அவர், காமராஜர் இறந்த போது அவருக்கு அரசு மரியாதை செலுத்தி மணிமண்டபமும் கட்டியவர் கலைஞர் எனக் கூறினார்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டும் என வி.பி.சிங்கிடம் கலைஞர் கோரிக்கை வைத்ததாகவும் அதனை வி.பி.சிங் நிறைவேற்றி தந்ததாகவும் குறிப்பிட்ட அவர், காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர் எனவும் கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதிற்கு கண்டனம் தெரிவித்து அவர் பேசுகையில், அமைச்ச்ர் செந்தில் பாலாஜி மீது போடப்பட்ட வழக்கு அயோக்கியத்தனமாக நடத்தப்படுகிறது. அவரை கைது செய்த போது மனித உரிமை மீறல் நடந்துள்ளது என்பதை நான் ஏற்கனவே கூறியிருந்தேன். நீதிமன்றம் நேற்று அதை உறுதி செய்துள்ளது. அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிர் பிழைத்தார். இல்லை என்றால் அமலாக்கத்துறையினர் செய்த சித்திரவதையில் செந்தில் பாலாஜி உயிரிழந்திருப்பார். அவருக்கு நாம் இரங்கல் தீர்மானம் தான் வாசித்திருக்க வேண்டி இருந்திருக்கும். அவர் தற்போது தப்பித்துள்ளார் எனப் பேசியுள்ளார்.
மேலும், மகாராஷ்டிராவில் 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அஜித் பவார் மீது வழக்கு உள்ளது. அவர் பா.ஜ.க விற்கு சென்ற உடன் அங்கே இருக்கும் ஆளுநர் அவருக்கு துணை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். ஆனால் இங்கே உள்ள ஆளுநர் உயர் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட ஒரு வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார் என விமர்சித்த அவர் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.