பாஜகவின் புதிய யுத்தி...கடும் எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின்...டெல்லிக்கு பறந்தது முதலமைச்சர் கடிதம்...!

பாஜகவின் புதிய யுத்தி...கடும் எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின்...டெல்லிக்கு பறந்தது முதலமைச்சர் கடிதம்...!

பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக, தற்போது இந்த திட்டம் குறித்த தங்களது கருத்தை கடிதம் மூலம் அனுப்பியுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் :

பாஜக தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. ஆனால் இன்னும் ஓராண்டில் ஆட்சி நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி, பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற யுத்தியை கையில் எடுத்துள்ளது. முன்பு ஒரே நாடு ஒரே மொழி, ஒரோ நாடு ஒரே ரேஷன் என்ற வரிசையில் தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் முழக்கம் இணைந்துள்ளது.

எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள் :
  
இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் கிரீன் சிக்னல் காட்டியதால் பாஜக தனது முடிவில் உறுதியாக இருக்கிறது. ஆனால் இந்த திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடிதம் அனுப்ப அறிவுறுத்தல் :

இதனிடையே, பாஜக முன்னெடுத்துள்ள இந்த திட்டத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சட்ட ஆணையத்தை மத்திய சட்ட அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பி தங்களது கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தியதோடு, ஆலோசனை கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தது.

இதையும் படிக்க : எம்.ஜி.ஆர் பிறந்தநாள்...மலர் தூவி மரியாதை செலுத்திய ஓபிஎஸ்... !

திமுக எதிர்ப்பு :

இந்நிலையில் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக தரப்பில், ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டை ஆளும் கட்சியான திமுக திமுக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தை திமுக எம்.பி. வில்சன் டெல்லியில் உள்ள சட்ட ஆணையத்தில் நேரடியாக அளித்துள்ளார். 

கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை :

அந்த கடிதத்தில், 1951-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. இதன்பின்பு சில மாநிலங்களில் ஆட்சிக்காலம் முடியும் முன்பே அரசு கலைக்கப்பட்டதால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்த இயலவில்லை.

அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற மக்களவையின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். அமைச்சரவை முடிவு அடிப்படையிலும், அவசர பிரகடனத்தை சுட்டிக்காட்டி கவர்னரும் ஆட்சியை கலைக்கலாம். ஒரு ஆட்சி என்னென்ன காரணங்களுக்காக கலைக்கப்படலாம் என எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. அதனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சியை கலைக்க முடியாது. இவ்வாறு திமுக தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.