பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத திமுக அரசை “டிஸ்மிஸ்” செய்யலாம் என மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் செல்லூர் ராஜூ தொிவித்துள்ளாா்.
இலவசம் எனக்கூறி மக்களை அவமானப்படுத்துகிறது :
மறைந்த முன்னாள் முதலமைச்சா் எம்ஜிஆாின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ஆறுமுச்சந்தியில் அதிமுக சாா்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சா் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினாா். அப்போது, காங்கிரஸ் கட்சியினர் கைவிட்ட திருப்பூர் குமரன் மனைவி மற்றும் கக்கனை நேரில் சென்று பார்த்து உதவிக்கரம் நீட்டியவர் எம்.ஜி.ஆர். இப்படி மனிதநேயமிக்க மனிதராக இருந்ததால் தான் எம்.ஜி.ஆரை 36 ஆண்டுகள் கழித்தும் நாம் அனைவரும் புகழ்ந்து வருகிறோம். அதேசமயம் மக்களுக்கான திட்டங்களை அதிமுக விலையில்லா மக்கள் நல திட்டம் என்று தான் கூறினார். ஆனால், திமுக அரசின் மக்கள் நல திட்டங்களை இலவசம் எனக் கூறி மக்களை அவமானப்படுத்துவதாக கூறினார்.
அல்வா கொடுக்கும் திமுக :
அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த நல திட்டங்களை திமுக நிறுத்தி விட்டது என்றும், அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகையையும் இன்னும் கொடுக்கவில்லை என்றும், அரசு ஊழியர்களுக்கு திமுக தலைமையிலான அரசு அல்வா கொடுத்து வருகிறது என்றும், தமிழகத்தில் மின்சார கட்டணம் ஆண்டுக்கு ஒரு முறை 6 சதவீதம் உயரப் போகிறது, இதற்க்கான அனுமதியை மத்திய அரசின் மின்சார வாரியம் வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
மக்களுக்கு என்ன பயன்?:
தொடர்ந்து பேசிய அவர், பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யலாம் என்றும், திமுக ஆட்சியில் தமிழக மக்கள் துன்பத்தில் இருப்பதாகவும், திருந்தாத உள்ளங்கள் இருந்து என்ன லாபம், திமுக ஆட்சியில் இருந்தும் மக்களுக்கு என்ன லாபம்" என கடுமையாக விமர்சித்துள்ளார்.