ஆளுநர் உரையை பேசி அரசியலாக்க விரும்பவில்லை...மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஆளுநர் உரையை பேசி அரசியலாக்க விரும்பவில்லை...மு.க.ஸ்டாலின் பேச்சு!

மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் மூலம் ஒரு கோடியே 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இமாலய சாதனை:

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசிநாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை எனவும், ஆட்சிப் பொறுப்பேற்ற 20 மாதங்களில் திமுக அரசு இமாலய சாதனை செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் ஜிடிபியில் தமிழ்நாட்டின் பங்கு 9 புள்ளி 9 சதவீதம் எனவும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இங்கு பணவீக்கம் குறைந்திருப்பதாகவும் ஸ்டாலின் கூறினார்.

இதையும் படிக்க : கடைசி நாள் கூட்டத்தொடர்...ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் புறகணிப்பு...!

மதத்தை எதிர்க்கவில்லை :

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 2 லட்சத்து 57 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெறுவதாகவும் முதலமைச்சர் தகவல் தெரிவித்தார். தமிழை படிக்காமல் பள்ளியில் தேர்ச்சி பெற முடியாது என்ற நிலையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழ் முழுமையாக பயிற்றுவிப்பதை அரசு தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் உறுதியளித்தார். மதவாதத்தை மட்டுமே எதிர்ப்பதாகக் கூறிய அவர், மதத்தை எதிர்க்கவில்லை எனவும் விளக்கமளித்தார். 

உலக முதலீட்டாளர்கள் மாநாடு :

தொடர்ந்து பேசிய அவர், வரும் நிதியாண்டில் பள்ளி வாசலுக்கு வழங்கப்படும் MRG மானியத்தொகை 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும் எனவும், முதலமைச்சர் கிராம சாலை விரிவாக்க திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார். அதேசமயம், பஞ்சாயத்து ஒன்றிய சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும் எனக்கூறிய முதலமைச்சர், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ம் ஆண்டு ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்தப்படும் எனவும் கூறினார்.