"அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்": மத்திய இணையமைச்சர் நாரயணசாமி பேச்சு!

"அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்": மத்திய இணையமைச்சர் நாரயணசாமி பேச்சு!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெற்று வருவதாக மத்திய இணை அமைச்சா் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசு திட்டப் பணிகளை மாநிலங்களுக்கான சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணையமைச்சர் நாரயணசாமி ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. தற்போது நடந்து வரும் பல்வேறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் குறித்தும் கலந்தாலோசித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், மதுரையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்தேன். குடிசைப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இதன் மூலம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் நிலை மேலும் மோசமடைந்திருப்பது தெரிந்தது, என்று கூறியுள்ளார்.
 
மேலும், பெங்களூருவில் தரமான கட்டடத்தை கட்டுவதற்கு சதுரடிக்கு ரூ.2ஆயிரம் முதல் ரூ.2,100 வரை செலவு ஏற்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் தரமற்ற கட்டுமானப் பொருள்கள், மின் சாதனப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. வீடு கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.13 லட்சம் நிர்ணயித்துள்ளது. இதனால் கட்டடத்தின் மதிப்பு 2 மடங்கு உயர்த்தப்பட்டு, தமிழகத்தில் மிகப் பெரிய ஊழல் நடைபெறுகிறது, எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
 
மேலும், தமிழகத்தைப் பொருத்தவரை மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மாநில அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. கடனுதவி திட்டங்கள் குறித்து வங்கியாளர்களிடம் புள்ளி விவரங்கள் இல்லை. இதனால் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து திண்டுக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியரைக் கொண்டு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுக் கூட்டம் நடத்த அறிவுறுத்தினேன், எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com