மணிப்பூர் விவகாரம்: மலைப்பகுதி, வனப்பகுதி சார்ந்த நிலம் அதிகம் உள்ள மணிப்பூரில் அதை அபகரிக்க கார்ப்பரேட்டுகள் முயற்சி செய்வதாக சொல்லபடுகிறது. இது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டால் தான் உண்மை தெரியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் டி.ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இப்பொழுது நாடாளுமன்றம் முடங்கி இருப்பதற்கு முழு காரணம் பாஜக தான் என்று சாடினார். " சென்ற கூட்டத்தொடரின் போதும் நாடாளுமன்றம் முடங்கியது. அதில், அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தப்பட்டது. அப்போதும் ஆளும் கட்சி அதை விவாதிக்க மறுத்துவிட்டது", என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச வேண்டும், விரிவான அறிக்கை தர வேண்டும். இந்தியா கூட்டணியின் இடம் பெற்றுள்ள கட்சிகள் பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து மணிப்பூர் விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை விவாதிக்க வேண்டும் என்பதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன", என்று கூறினார்.
அதோடு, "ஜனநாயகத்தின் தாயாக விளங்கும் இந்தியாவில் பாராளுமன்றம் செயல்படாமல் முடங்கி இருப்பதற்கு யார் காரணம்.? பிரதமராக மோடி தேர்வாண பின் நாடாளுமன்ற கட்டிடத்தின் படிக்கட்டுகளை தொட்டு வணங்கி தான் உள்ளே நுழைந்தார் . நாடாளுமன்றம் செயல்படாமல் முடக்கப்பட்டால் ஜனநாயகத்தின் மரணத்திற்கு அது தொடக்கம் என்பதை மக்களும் அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகம் செயல்படாமல் உயிர் இழக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும், எங்கு எல்லாம் பாசிச சக்திகள் ஆட்சியை கைபற்றினார்களோ அங்கு நாடாளுமன்றம் செயலிழக்கிறது", என்றும் விமர்சித்தார்.
அதனைத்தொடர்ந்து, மணிப்பூர் விவகாரம் குறித்து பேசுகையில்,
" நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கி இருப்பதற்கு இன்றைய ஆட்சியாளர்களான பிஜேபி தான் காரணம்.மணிப்பூர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு சமூக பகுதியினர் வாழ்ந்து வருகின்றனர். நம் இந்தியாவின் எல்லை மாநிலம், முக்கியமான மாநிலம். இங்கு அமைதி குழைந்ததற்கு யார் காரணம்? இரட்டை எஞ்சின் சர்க்கார் அமைந்தால் நாடு முன்னேறும் என்று சொன்னார். மணிப்பூரிலும் மத்தியிலும் பாஜக தான் ஆட்சி செய்கிறது.
பாஜக பின்பற்றும் அரசியல் மக்களை பிரிந்து ஆளும் குரூரமான அரசியலாக தான் உள்ளது. மணிப்பூர் பிரச்சனைக்கு காரணம் மக்களை பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவது தான். மணிப்பூர் முதலமைச்சர் சூழலை எதிர்கொள்ள திராணி இல்லாதவராக இருக்கிறார். அவரே பதவி விலக வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 10 கட்சிகள் கேட்டுள்ளது.
அமித்ஷா அங்கு போய் அரசியல் கட்சிகளை பார்த்தது உண்மை தான் ஆனால் வந்து என்ன செய்தார். நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊரில் அகதிகளாக வாழ்கிறார்கள். பெண்கள் படும் கஷ்டத்தை சொல்ல முடியாமல் மனம் வலிக்கிறது.
பாரத மாதா என்று கூறுகிறோம் மணிப்பூரில், அங்கு இருக்கும் பெண்கள் பாரத மாதாக்கள் இல்லையா? அவர்கள் ஏன் இத்தனை கொடுமைகளை சந்திக்க வேண்டும்?. இந்தியாவை உலக அரங்கில் தலை குனிய வைத்ததற்கு யார் காரணம்? மணிப்பூரில் நடக்கும் கலவரத்திற்கு மோடியும் அவர் கட்சியும் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மணிப்பூர் பிரச்சினை தேசிய பிரச்சனையாக, மனித பிரச்சனையாக மாறி உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை குழுவை மணிபூருக்கு அனுப்பி வைத்தது. அங்கு இருந்து வந்து நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு கேட்டனர்; வழங்கப்படவில்லை.
மலைப்பகுதி, வனப்பகுதி சார்ந்த நிலம் அதிகம் உள்ள மணிப்பூரில் அதை அபகரிக்க கார்ப்பரேட்டுகள் முயற்சி செய்வதாக சொல்லபடுகிறது. இது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டால் தான் உண்மை தெரியும் " என்றார். மேலும், " மனுஷ்மிருதி அடிப்படையில் ஒற்றை ஆட்சியாக இந்து ராஷ்டிர என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது தான் பாஜக நோக்கமாக உள்ளது. பாஜக பின்பற்றுவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கை", என கூறினார்.
இந்தியா மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றால் , நாட்டை மீட்க வேண்டும் என்றால் பாஜக பிடியில் இருந்து இந்தியா மீட்கப்பட வேண்டும். பாஜக அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றார். மேலும், எதிர்கட்சிகள் இணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் பிரதமர் இருந்து வாதங்களை கேட்டு பேச வேண்டும், விளக்கம் கொடுக்க வேண்டும் என்றார்.