ஜி20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகள் சேர்ந்த ஜி20 அமைப்பிற்கு, நடப்பாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழ் தான் தற்போது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அழைப்பிதழில், வழக்கமாக குறிப்பிடப்படும் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில், பாரத் குடியரசுதலைவர் என அச்சிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அரசியல் சாசனத்தின் ஒன்றாவது பிரிவில் உள்ள மாநிலங்களின் ஒன்றியம் என்பதற்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவரைத்தொடர்ந்து, பாரத குடியரசுக்கு வாழ்த்துகள் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.