தலிபான்கள், பெண்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் வடமேற்கு ஹெராத் மாகாணத்தில், தோட்டங்கள் அல்லது பசுமையான இடங்களில் உள்ள உணவகங்களுக்குச் செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்படும் என்ற விதிமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தொடரும் கட்டுப்பாடுகள்:
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா ராணுவம் திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியது. அதுமுதல் நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் நடைமுறைப்படுத்தியும் வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. முதலில் பெண்கள் கல்வி கற்பதற்கான விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பின்னர், ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றுவது உட்பட பல வேலைகளில் இருந்தும் அவர்கள் தடை செய்யப்பட்டனர். இது மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானில் பெண்கள் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்:
இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானின் வடமேற்கு ஹெராத் மாகாணத்தில், தோட்டங்கள் அல்லது பசுமையான இடங்களில் உள்ள உணவகங்களுக்குச் செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்படும் என்ற விதிமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் மற்றும் ஆண்கள் அருகருகே அமர்ந்திருப்பதாலும், ஹிஜாப் சரியாக அணியாததாலும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தடை ஹெராட்டில் உள்ள பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அத்தகைய இடங்கள் ஆண்களுக்கு திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் மறுப்பு:
அனைத்து உணவகங்களிலும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ளது ஆப்கானிஸ்தான் அரசாங்கம். அதாவது அனைத்து உணவகங்களுக்கும் இந்தத் தடை விதிக்கப்படவில்லை என்றும் ஆண்களும் பெண்களும் கலந்துகொள்ளக்கூடிய பூங்காக்கள் போன்ற பசுமையான பகுதிகளைக் கொண்ட உணவகங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில்... நிர்மலா சீதாராமன்!!