
மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் நிச்சயம் அணை கட்டப்படும் என்றும், அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு முறை பயணமாக டென்மார்க் சென்று திரும்பிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்றும், எந்த காரணத்தைக் கொண்டும் மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது, சட்டப்படியும் அது முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.
மேகதாது விவகாரம் குறித்து இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் துரைமுருகன், இந்த ஆலோசனைக்கு பிறகு, டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்திலும் மேகதாது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.