ராகுல் காந்தியின் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் எழுதியுள்ள கடிதத்தில், ராகுல் காந்தியின் பாதுகாப்பு குறித்த ஏற்பாடுகள் கவலை அளிக்கும் விதமாக இருப்பதாக எழுதப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடிதத்தில் இருந்தது என்ன?:
டிசம்பர் 24-ம் தேதி இந்திய ஒற்றுமை பயணம் டெல்லியை அடைந்த பிறகு, நடைபயணத்தின் பாதுகாப்பு பல முறை கேள்வியெழுப்புவதாக இருந்தது எனவும் பாதுகாப்பு வளையத்தை பராமரிப்பதில் முற்றிலும் தோல்வி ஏற்பட்டுள்ளது எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், ராகுல் காந்தியுடன் வரும் நடைபயணிகளும், காங்கிரஸ் தொண்டர்களும் அவரை சுற்றி சுற்றி வளைத்து பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில், இதுமட்டுமின்றி, இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்பவர்களை துன்புறுத்துவதற்காகவும், பெரிய பிரமுகர்களை பங்கேற்க விடாமல் இருக்கவும், உளவுத்துறை பலரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் பாதுகாப்பு தொடர்பாக டிசம்பர் 23 அன்று ஹரியானாவில் எப்ஐஆர் பதிவு செய்துள்ளோம் எனவும் வேணுகோபால் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.
நாட்டில் அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்காக இந்திய ஒற்றுமை பயணம்m மேற்கொள்ளப்படுவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு இதில் பழிவாங்கும் அரசியல் செய்யாமல், காங்கிரஸ் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின் இரண்டு பிரதமர்கள் - இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஏற்கனவே நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
-நப்பசலையார்