தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், மிசோரம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது. 2024 தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல்கள் ஒரு முன்னோட்டமாக அமையும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறுகின்றனர். இந்த முறையும் மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிர முயற்சியில் உள்ள பாஜக, முன்னதாக நடைபெற்ற கர்நாடக தேர்தலில் தோல்வியை தழுவியதால், வருகிற 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு மும்முரம் காட்டி வருகிறது.
அதேசமயம், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணியும் 5 மாநில தேர்தல்களில் வெற்றியை பெறுவதற்காக தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தற்போது தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா மாநிலத்தில், முதற்கட்டமாக 55 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. தெலுங்கானாவை ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி ஏற்கனவே, தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் வரும் நவம்பர் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இம்மாநிலத்திற்கு முதற்கட்ட 30 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான, 144 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட பட்டியலை காங்கிரஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
முன்னதாக, 2024 தேர்தலில் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்ற முயற்சியில் தீவிரம் காட்டி வரும் பாஜக, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் என 3 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.