பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 6ல் வெற்றி பெற்ற அசிம் போலியாக வெற்றி பெற்றதாகவும், ஆட்களை வைத்து மிரட்டுவதாகவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் யூடியூபர் ஒருவரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6ல் அசீம் என்பவர் முதலாவது இடம் பிடித்து பட்டத்தை வென்றார். இந்த பட்டம் அசீமுக்கு வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக பல தரப்பினர் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6ல் அசீமுக்கு பட்டம் வழங்கியதில் முறைகேடாக நடந்திருப்பதாக கூறி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் யூடியூபர் ஜோ மைக்கல் 24 கேள்விகள் கேட்டு அனுப்பி உள்ளார். மேலும் இது தொடர்பாக அவரது சமூக வலைதள பக்கத்திலும் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக பிக் பாஸ் பிரபலம் அசீம் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் தனக்கு மிரட்டல் மற்றும் தன் மீது அவதூறு பரப்புவதாக யூடியூபர் ஜோ மைக்கல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜோ மைக்கல், வழக்கமாக அனைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பொதுமக்கள் போன் கால் மூலமாக போட்டியாளர்களுக்கு வாக்கு செலுத்தலாம், ஆனால் பிக் பாஸ் 6ல் ஹாட்ஸ்டார் மூலமாக மட்டுமே வாக்கு செலுத்த வேண்டும் என்ற முறை கொண்டு வந்தது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் பல முறை கமல்ஹாசனே அசீமை எச்சரித்து தக்க வைத்த போதும் அசீம் எப்படி முதலாவதாக பட்டம் பெற்றார் என்பதில் கேள்வி எழுவதாகவும் அவர் கூறினார்.
இதனால் இந்த முறைகேடு தொடர்பாக இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளையில் உள்ள தகவல் அறியும் சட்டத்தில் 24 கேள்விகளுக்கு தகவல் கேட்டு அனுப்பி இருப்பதாகவும் அதில் அசீம் எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளார்? ரெட்கார்டு கொடுத்த போதும் எலிமினேட் செய்யாமல் அசீம் இருந்தது எப்படி? என பல்வேறு கேள்விகள் கேட்டு அனுப்பி இருப்பதாகவும் அவர் கூறினார்.
பிக்பாஸ் பட்டம் பெற்றது தொடர்பாக தான் எழுப்பிய கேள்வியை உடனடியாக வாபஸ் பெறக்கோரி அசீம் அவரது ஆதரவாளர்களான தேசிங்க சோழன், சிங்காரவேலன் மற்றும் இமான் ஆகியோர் செல்போன் மூலமாக மிரட்டல் விடுத்து வருவதாகவும் தன்னை பற்றி சமூக வலைதளத்தில் தொடர்ந்து அசீம் அவதூறு பரப்பி வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், அசீம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பணத்தை கொரோனாவால் உயிரிழந்த நபர்களுக்கு உதவி செய்வதாக கூறியதாகவும் ஆனால் இதுவரை எந்த உதவியும் அசீம் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து, அசீமின் ஆதரவாளர்கள் சிலர் தங்களுக்கு காவல்துறையில் பழக்கம் இருப்பதாகவும், காவல் அதிகாரிகளின் பலத்தை பயன்படுத்தி மிரட்டியதாகவும் அவர் கூறினார்.
எந்த வித முன்பகையின் காரணமாகவும் அசீம் மீது வழக்கு தொடரவில்லை எனவும் பொது நலன் கருதி மட்டுமே இது போன்ற புகார்களை பதிவு செய்திருப்பதாகவும் இதே போல தான் பப்ஜி மதன், லோன் ஆப் மற்றும் மீரா மிதுன் மீது வழக்கு தொடர்ந்தாகவும் அவர் கூறினார். இதனால் தன்னை மிரட்டிய பிக் பாஸ் பிரபலம் அசிமின் ஆதரவாளர்கள் மற்றும் அவதூறு பரப்பிய அசீம் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:தன்னையே கேலி செய்தாலும், மக்களை மகிழ்வித்த மனோபாலா...!!