சக கவுன்சிலரை "_____" என திட்டிய திமுக கவுன்சிலர்... போர்க்களமான நகரமன்ற அலுவலகம்!!

சக கவுன்சிலரை "_____" என திட்டிய திமுக கவுன்சிலர்... போர்க்களமான நகரமன்ற அலுவலகம்!!
Published on
Updated on
1 min read

கோவையில் நடந்த நகராட்சிக் கூட்டத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவர் சக கவுன்சிலரை நாயே என திட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை நகராட்சியில் 31-ம் தேதியன்று மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நகராட்சித் தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நகரமன்ற உறுப்பினர்கள் தி.மு.க., பா.ஜ.க, அ.தி.மு.க. வை சேர்ந்த 27 பேர் பங்கேற்றனர். 

இந்த நிலையில், ஒரே நாளில் 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருந்த நிலையில், இந்த கூட்டத்தை 2 நாட்களாக நடத்துவதற்கு நகராட்சி தலைவர் திட்டமிட்டார். ஆனால் நகராட்சியின் கவுன்சிலர்கள் ஒரு சிலர் கூட்டத்தை ஒரே நாளில் நடத்தி முடிக்க வேண்டும் என கொடி பிடிக்கத் தொடங்கியதால் திடீரென அங்கு பரபரப்பு நிலவியது. 

அப்போது கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவர் எழுந்து நின்று, கூட்டத்தை கெடுப்பதென்றே சில நாய்கள் பிரச்சினை செய்ததாக கூறினார். இதனால் ஆவேசமடைந்த பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள், அது எப்படி எங்களை நாய் என்று சொல்லலாம் என வாக்குவாதத்தில் இறங்கியதால் திடீரென பரபரப்பு நிலவியது.

சக கவுன்சிலர்களையே திட்டிய தி.மு.க. கவுன்சிலர் மன்னிப்பு கேட்காமல் நின்றிருக்க, இதனை தட்டிக் கேட்க வேண்டிய நகராட்சி ஆணையரே எனக்கென்ன என்று அமர்ந்து கொண்டு செல்போனில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தங்களை நாய் என திட்டிய கவுன்சிலர் மன்னிப்புக் கேட்கவில்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என கூறியவர்கள், கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியேறினர். 

பின்னர் நகராட்சி தலைவர்கள் மற்றும் ஆணையாளர் இணைந்து கவுன்சிலர்களை சமாதானப்படுத்தி கூட்டத்தை நடத்தி முடித்தனர். எம்.எல்.ஏ.க்களுக்குள், எம்.பி.க்களுக்குள், மாவட்டச் செயலாளர்களுக்குள் மட்டுமே நீயா நானா என போட்டி நடந்து வந்த நிலையில், இப்பொழுது கவுன்சிலர்களுக்குள்ளேயே இப்படி அக்கப்போரா? என முணுமுணுக்கின்றனர் அந்த பகுதி மக்கள். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com