"அப்பாவுக்கு அஞ்சலி"... கண்ணீருடன் எம்.எஸ்.பாஸ்கர்...

"அப்பாவுக்கு அஞ்சலி"... கண்ணீருடன் எம்.எஸ்.பாஸ்கர்...

தமிழ் திரையுலகின் டப்பிங் உலகில் மிகப்பெரிய ராஜாவாக இருக்கும் ஒரு நடிகர் தான் எம்.எஸ்.பாஸ்கர். ஒரு பெரும் டப்பிங் கலைஞர் ஆவதற்கு உதவிய பல ஜாம்பவான்களில் ஒருவரான வசனகர்தா ஆரூர் தாஸ் நேற்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததை அடுத்து, அவருக்கு பல திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து எம்.எஸ். பாஸ்கரும் தனது இரங்கல் வீடியோவை வெலியிட்டுள்ளார். மேலும், தனது வருத்தங்களை ஒரு கடிதமாகவும் வெளியிட்டுள்ளார்.

தமிழ் ஓய்ந்ததோ? தன்னிகரற்ற எழுத்து சாய்ந்ததோ? தமிழை தங்கு தடையின்றி, பிழையறப்பேச இந்த எளியவனுக்கு படிப்பித்த என் 'ஆசான்' விண்ணுலகம் சென்றாரோ...?

"டேய்..பாஸ்கரா" என்று என்னை அன்போடு அழைத்த அக்குரலை இனி எப்பிறப்பில் கேட்பேன்?

அரவணைத்தும், கண்டித்தும் என்னை வழி நடத்திய என் குருநாதர் அமரரானாரோ?

இந்நிலையல்ல... எந்நிலைக்கு யான் சென்றிடினும் என்னை ஏற்றி விட்ட ஏணி அவரன்றோ..?

மறக்க இயலுமோ? என் இறுதி மூச்சு உள்ளவரை 'அப்பா' தங்களை மறக்க இயலுமோ?

தாங்கள் பேசாவிட்டாலும் தங்கள் வசனங்கள் காலாகாலத்திற்கும் பேசப்படுமன்றோ..?

மீண்டும் தங்கள் வசனங்களை தாங்கள் சொல்லித்தர தங்கள் முன்பு நின்று தங்கள் சீடன் நான் 'டப்பிங்' பேசுவேனா?

"சென்று வாருங்கள் அப்பா"...

மாதாவின் நிழலில் இளைப்பாற...

கண்ணீருடன்

தங்கள் மாணாக்கன்
எம்.எஸ்.பாஸ்கர்.