திருச்சி மாவட்ட நீர் நிலைகளை அழித்து வரும் தமிழக அரசை கண்டித்து சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட வந்த தமிழக விவசாயிகள் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் பொங்கலூர், பஞ்சப்பூர், கே.சாத்தனூர், துவாக்குடி, பெரியகுளம், உள்ளிட்ட 13 ஏரிகளை தமிழக அரசு அழித்து வருவதாகவும், நீர் நிலைகளை அழித்து சாலை அமைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னை தலைமை செயலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தண்ணீர் அருந்த போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
போராட்டத்தில் ஈடுபட வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தினர், வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் நீர் நிலைகள் அழிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் திருச்சி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி அனைத்துமே, ஆளும் தமிழக அரசும் அதிகாரிகளும், கொள்ளையடித்து விடுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து திருச்சி மாவட்டத்தில் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து சென்னையில் இன்று தண்ணீர் அருந்தா போராட்டத்தில் ஈடுபட முயன்றதாகவும், விவசாயிகளுடைய கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். தலைமை செயலகத்தை நோக்கி முற்றுகையிட சென்ற விவசாயிகளை காவல்துறையினர் அனுமதிக்காததால், அவர்கள் சாலை ஓரத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் பின்னர் கைது செய்தனர்.
இதையும் படிக்க: ரேஷன் அரிசி கடத்தல்... போலீசார் கைது!!!