சென்னை கலைவாணர் அரங்கில் 922 நில அளவையர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, 922 நில அளவையர் மற்றும் வரைவாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வாகியுள்ள இப்பணியாளர்களில், 323 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இதையும் படிக்க : கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதியில் மாற்றம்...!
முன்னதாக கலைவாணர் அரங்கின் கீழ்த்தளத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் செயல்பாட்டை விளக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதேபோன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 314 கோடியே 89 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம், மீன் இறங்குதளங்கள், மீன் வளர்ப்புக்குளங்கள், பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கான 21 விடுதிக் கட்டடங்கள், 9 பள்ளிக் கட்டடங்கள் மற்றும் 4 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிக் கட்டடங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அத்துடன், தகவல் தொழில்நுட்பம் மற்றம் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 54 கோடியே 61 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும், தாட்கோ மாவட்ட மேலாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் பயன்பாட்டிற்காக 23 வாகன சேவைகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.