மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கடிதம்..!
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டுமென மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்  
26-10-2023 அன்று கடிதம் எழுதியுள்ளார். 
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது, கிராமப்புறங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான முக்கியமான திட்டங்களில் ஒன்று என்பதையும், இந்தத் திட்டம் கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்பை வழங்குவதோடு, கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்திட ஏதுவான நீடித்த மற்றும் நிலையான கிராமப்புற சொத்துக்களை உருவாக்கிடும் மற்றும் கிராமப்புற மக்களின் தேவைகளைப் பெருமளவில் பூர்த்தி செய்திடும் ஒரே திட்டமாகும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினைச் செயல்படுத்துவதில், பல்வேறு அளவுகோல்களின்கீழ் தமிழ்நாடு எப்போதும் சிறந்த மாநிலமாகத் திகழ்வதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் 92.86 இலட்சம் குடும்பங்களுக்கு பணி அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில், 76.15 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 91.52 இலட்சம் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் புள்ளிவிவரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். 
தமிழ்நாட்டின் விவசாயம், தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழையையே பெரிதும் நம்பியிருக்கும் நிலையில், இவற்றில் மாறுபாடுகள் ஏற்படும் சூழலில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கு அதிக தேவை ஏற்படுவதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கிராமப்புறங்களில் உள்ள முதியோர்கள், ஆதரவற்ற பெண்கள், குடும்பத் தலைவிகள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு முக்கியமானதொரு வாழ்வாதாரமாகவும், குறிப்பாக விவசாயம் நலிவடைந்த பருவத்தில், கிராமப்புறங்களில் உள்ள பலருக்கு கூடுதல் வாழ்வாதார வாய்ப்பாகவும் கருதப்படுகிறது என்று தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்தத் திட்டத்தில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் பெண்களாக இருப்பதாலும், அவர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுவதாலும், அவர்களின் நிதிநிலை மற்றும் வாழ்வாதாரம் பெரிதும் மேம்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில், 2023-2024 ஆம் ஆண்டில் 40 கோடி மனித நாட்கள் தேவைப்படும் நிலையில், இதுவரை, 28 கோடி மனித நாட்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 23-10-2023 வரை, 66.26 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 76.06 இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதன் மூலம், தமிழ்நாடு 31.15 கோடி மனித நாட்களை எட்டியுள்ளதாகவும் தனது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 
2023-2024 நிதியாண்டில், 19-7-2023 வரை, தொழிலாளர்களுக்கு திறன்சாரா ஊதியத்திற்காக ரூ.4,903.25 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து 25-9-2023 அன்று 1,755.43 கோடி ரூபாய், திறன்சாரா ஊதியம் வழங்குவதற்காக ஒன்றிய அரசால் ஒப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், எனினும் அனுமதிக்கப்பட்ட தொகையில் ரூ.418.23 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ரூ.1,337.20 கோடி, தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதோடு, அதற்குப்பிறகான வாரங்களுக்கான ஊதியத்திற்கான ரூ.1,359.57 கோடி நிலுவைத் தொகையும் இன்னும் வழங்கப்படவில்லை என்றும்,  20-10-2023 நிலவரப்படி, தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் ஊதிய நிலுவை ரூ.2,696.77 கோடி என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.   
"கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 17-10-2023 அன்று, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு தான் ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டுமென்று பொது மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாகவும், இதேபோன்ற கோரிக்கை திருவண்ணாமலை மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போதும் தமக்கு வந்ததாகவும் தனது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 
எனவே, மேற்குறிப்பிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,696.77 கோடி மொத்த ஊதிய நிலுவைக்கான தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதோடு, திறன்சாரா தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து கூடுதல் நிதி விடுவிக்கப்பட வேண்டுமென்றும் தனது கடிதத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com