உதவித்தொகையை நிறுத்துவதாக அறிவித்த மத்திய அரசு...கண்டனம் தெரிவித்த சிதம்பரம்!

உதவித்தொகையை நிறுத்துவதாக அறிவித்த மத்திய அரசு...கண்டனம் தெரிவித்த சிதம்பரம்!

ஆராய்சி மாணவர்களுக்கான மெளலானா ஆசாத் தேசிய உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்துவதாக அறிவித்ததற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வித்துறை அமைச்சரான மௌலான ஆசாத் பெயரில் கடந்த 2009ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆராய்ச்சி படிப்பில் ஈடுபடும் மாணவர்கள் முதல் 2 ஆண்டுகளில் மேற்கொள்ளும் ஆய்வில் திருப்தி இருக்கும் பட்சத்தில் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை நீடிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், இந்த உதவித்தொகையின் மூலம் இஸ்லாம், கிறிஸ்தவம், புத்தம், பார்சி, சீக்கியம், சமணம் என ஆறு சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்கள் பயனடைந்து வருகின்றனர். 

இதையும் படிக்க : அதிமுக வேட்பாளராக இவரே தொடர்வார்...தமிழ்மகன் உசேன் வெளியிட்ட படிவம்...அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு!

இந்நிலையில் சிறுபான்மை சமூகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை நிறுத்தப்படுவதாக கடந்த டிசம்பர் மாதம் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்தார். இதற்கு இடதுசாரிகள் தரப்பிலும், மாணவர் சங்கங்கள் சார்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட தொடங்கினர்.

இந்நிலையில் உதவித்தொகையை நிறுத்துவதாக அறிவித்த மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான பி.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மெளலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிக்க கல்விக் கடனுக்கான மானியத்தை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் காரணம் முற்றிலும் நியாயமற்றது என்று விமர்சித்துள்ளார்.

மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட கல்வி உதவித்தொகை திட்டங்கள் இருப்பது உண்மைதான். ஆனால் அதனை காரணம் காட்டி சிறுபான்மையினரின் உதவி தொகை திட்டத்தை நிறுத்தி வைக்கப்படுமா என்ன? மகாத்மாக காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை போன்று பிஎம் கிஸான் திட்டமும் இருக்கிறது. இது போன்று ஏரளாமான திட்டங்கள் இருப்பதை அறிந்தும், சிறுபான்மையினர் மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது அவமானத்திற்குரியது” என்று விமர்சித்துள்ளார்.