நிலவை நெருங்கும் சந்திராயன்-3!!

நிலவை நெருங்கும் சந்திராயன்-3!!
Published on
Updated on
1 min read

புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கிய பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் சுமாா் 615 கோடியில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில், சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல ஏதுவாக, அதிலுள்ள உந்துவிசை இயந்திரங்கள் இயக்கப்பட்டு அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. 

இதன்மூலம் குறைந்தபட்சம் 236 கிலோ மீட்டா் தூரமும், அதிகபட்சம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 609 கிலோ மீட்டா் தொலைவும் கொண்ட புவி சுற்றுப்பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. தற்போது அதற்கு அடுத்தபடியாக விண்கலத்தை புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்து விலக்கி, நிலவின் ஈா்ப்பு விசைப் பகுதிக்குள் செலுத்தும் முயற்சி நேற்றிரவு 12.05 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் சிக்கலான இந்த பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதன் பயனாக சந்திரயான்-3 விண்கலம், நிலவின் ஈா்ப்பு விசைப்பகுதிக்குள் உந்தி தள்ளப்பட்டது. 

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், சந்திரயான்-3 விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் தனது இறுதி பயணத்தை நிறைவு செய்த நிலையில், தற்போது நிலவை நோக்கி விண்கலம் பயணித்து வருவதாக தெரிவித்துள்ளனர். அடுத்தகட்டமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி உந்தித் தள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,  நிலவு சுற்றுப் பாதை மாற்றம் திட்டமிட்டபடி நிறைவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com