நிலவின் சுற்றுப் பாதைக்குள் ‘சந்திரயான்-3’!!

நிலவின் சுற்றுப் பாதைக்குள் ‘சந்திரயான்-3’!!
Published on
Updated on
1 min read

புவி வட்டப் பாதையில் பயணித்து வந்த ‘சந்திரயான்-3’ விண்கலத்தை நிலவின் சுற்றுப் பாதைக்குள் செலுத்தும் பணிகளை இஸ்ரோ முன்னெடுத்துள்ளது. 

நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்ட நிலையில் பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை உயா்த்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு ஐந்தாவது முறையாக அதிகரிக்கப்பட்டு குறைந்தபட்சம் 236 கிலோமீட்டர் தொலைவும், அதிகபட்சம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 609 கிலோ மீட்டர் தொலைவும் கொண்ட பாதையில் விண்கலம் பயணித்து வந்தது.

தற்போது அதற்கு அடுத்தகட்டமாக சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் சுற்றுப்பாதைக்குள் செலுத்தும் பணிகள் திங்கள்கிழமை நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்டன. இது வெற்றியடையும் பட்சத்தில் இன்று முதல் நிலவின் ஈா்ப்பு விசைக்குள் சந்திரயான் பயணிக்கத் தொடங்கும். 

அதன் தொடா்ச்சியாக வரும் 17-ஆம் தேதி உந்து கலனில் இருந்து லேண்டா் கலன் விடுவிக்கப்பட்டு,  திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தையொட்டிய பகுதியில் லேண்டா் கலன் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com