"போயிட்டு வா அப்பு"... நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்!!

"போயிட்டு வா அப்பு"... நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்!!

நடிகர் மாரிமுத்துவின் மறைவிற்கு, சிலம்பரசன், விஷால் உட்பட திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து  இன்று காலை தொலைக்காட்சித் தாெடருக்கு டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பு வந்து இறந்துள்ளார். அதட்டும் குரல் திடகாத்திரமான உடல் இவைதான் மாரிமுத்துவின் அடையாளம். தமிழ்நாட்டின் கிராமங்களில் இருக்கும் பெரும்பாலான அப்பாக்களை அப்படியே உரித்து வைத்திருந்தார், மாரிமுத்து. இவரெல்லாம் இப்படி திடீரென இறப்பாரா? என கேட்டுகும் அளவிற்கான தோற்றத்தில் இருந்தவர் திடீரென இறந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சோனியா போஸ் பேசியதாவது "திரைப்படங்கள் நடித்த பிறகுதான்  தற்போது தொலைக்காட்சி தொடரின் நடித்து பிரபலம் ஆகி உள்ளார். நடிகர் வடிவேல் மீம்ஸை விட இவரது மீம்ஸ் தற்போது பிரபலமாகி வந்தது. மிகுந்த அளவு அனைவரும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி  சந்தோசமாக வாழ வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிலம்பரசனும் தனது X பக்கத்தில் நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, " மாரிமுத்து அவர்களின் மறைவு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நங்கள் ஒன்றாக சேர்ந்து பணியாற்றிய சமயங்கள் நினைவிற்கு வருகிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதே போல், நடிகர் விஷாலும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, " வாழ்கை கணிக்க முடியாத ஒன்று. என்னுடன் நடித்த சக நடிகரும், இயக்குனரும் மற்றும் நல்ல மனிதருமான மாரிமுத்து, தற்போது இல்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. அவர் இயக்குனராக இருந்து, நடிகராக மாறும் சமையத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். அவரது குடும்பத்தினருக்கு, அவரின் மறைவை ஏத்துக்குவதற்கான மனவலிமையை கடவுள் வழங்க வேண்டும் என வேண்டிகொள்கிறேன்"  என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கார்த்தியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். " மாரிமுத்து அவர்கள் நேருக்கு நேர் படத்தில் துணை இயக்குநராக இருந்த பொழுது சந்தித்திருக்கிறேன். மிகவும் திறமையான நபர். எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும், மிக யதார்த்தமாக நடித்துவிடுவார். அவரின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்"  என பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிரசன்னா " மாரிமுத்துவும் நானும் கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் படத்தில் ஒன்றாக பணிபுரிந்துள்ளோம். அவரது வாழ்கை அவ்ளோ எளிதானது அல்ல. ஒரு நடிகராக, சிறந்து விளங்கி கொண்டிருந்த சமயத்தில் இவ்வாறு நடந்திருக்க கூடாது. போயிட்டு வா அப்பு!" என பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் " ஆழ்ந்த இரங்கல். உங்களுடன் பணிபுரிந்த நாட்கள் ஞபாகம் வருகின்றது" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க || "வலி வந்து அழுத்துது" மாரிமுத்துவின் வீடியோ வைரல்!