வந்தே மாதரம் பாடல் வெளியீட்டு விழாவில் இந்தி இல்லாமல் வாழ முடியுமா என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வந்தே மாதரம் பாடல் :
பிரபல நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர், “வந்தே மாதரம்” என்னும் ஆல்பத்தை தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் எழுதியும், இசையமைத்தும் உள்ளார். இந்த இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.
டி.ராஜேந்தர் பேட்டி :
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், என்னையும், என் மகனையும், என் குடும்பத்தையும் கலைத்துறையில் நான் கால் ஊன்றிய காலத்திலிருந்து என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு வணக்கம் என்று கண் கலங்கியப்படி வணக்கம் கூறியவர், இன்றைக்கு என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள் என்று தெரிவித்தார். நான் நிறைய படங்களை பண்ணி ரெக்கார்ட்ஸ் செய்துள்ளேன். அந்தவகையில் இன்றைக்கு டி. ஆர் ரெக்கார்ட்ஸ் ஆரம்பித்து சினிமா தவிர மற்ற பாடல்களை தயாரித்து இசையுடன் வெளியிட வேண்டும் என்று நினைத்து தான் இந்த ”வந்தே மாதரம்” பாடலை தயாரித்திருப்பதாக கூறினார்.
இதையும் படிக்க : சிம்புவின் திருமணம் எப்போ? டி.ராஜேந்தரின் பதில் என்ன?
பான் இந்தியா அளவில் வெளியிட முடிவு :
தொடர்ந்து பேசிய அவர், மோனிஷா என மோனலிசா படத்தை பான் இந்தியா படமாக எடுப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், அப்போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் என்னால் எடுக்கமுடியவில்லை. அதனால் தற்போது இந்த பாடலை தமிழ், இந்தி உள்பட தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் எடுத்து பான் இந்தியா அளவில் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.
இந்தி இல்லாமல் வாழ முடியுமா?:
தொடர்ந்து, பாரத மாதாகி ஜே என்று சொன்னால் பிஜேபி என்று சொல்கின்றனர் என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஜெய்ஹிந்த் என்று சொன்னால் அவர்களை காங்கிரஸ் என்று சொல்லி விடலாமா? என்று கேள்வி எழுப்பினார். வாஜ்பாய் காலத்தில் இருந்தே எனக்கு இந்தி தெரியும் என்று கூறியவர், ரூபாய் நோட்டில் கூட தான் அனைத்து மொழிகளும் உள்ளது என்றும், ரயிலில் இந்தி எழுதி இருக்கிறது என்பதற்காக அதில் போகாமல் இருக்கிறோமா? என்றும், நாம் இந்தி இல்லாமல் வாழ முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார். இந்தி குறித்து டி.ராஜேந்தரின் பதில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.