காலாண்டு வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் போராட்டம்...!

Published on
Updated on
1 min read

காலாண்டு வரி உயர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர்களின் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் தொடங்கியது.

டீசல் விலை உயர்வு மற்றும் சுங்க கட்டண உயர்வுகளால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியாகி வருவதாக லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால், லாரிகளுக்கான காலாண்டு வரி 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

இதனை கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்தனர். அதன்படி, காலாண்டு வரி உயர்வை திரும்பப் பெறவேண்டும், ஆன்லைன் மூலம் வழக்கு போடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் லாரிகள் மற்றும் டெம்போ உள்ளிட்ட 20 லட்சம் வாகனங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. 

லாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படுவதுடன், 200 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்களின் கோரிக்கைகள் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தங்களின் போராட்டம் காலவரையற்ற போராட்டமாக உருவெடுக்கும் என்றும் லாரி உரிமையாளர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். 

லாரி உரிமையாளர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com