செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...! 3 முறையும் ஒரே நபர்...!

செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...! 3 முறையும் ஒரே நபர்...!
Published on
Updated on
1 min read

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்திற்கு சரியாக 7.15 மணிக்கு தொடர்பு கொண்ட   மர்ம நபர் 8 மணி அளவில் குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையம் மற்றும் பெருநகர காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததால், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் ரயில் நிலையம் முழுவதும் சோதனையிட்டனர்.

பின்பு பூக்கடை போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மற்றும் ஜூன் 21ம் தேதி இதே போன்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. சென்னை வியாசர்பாடி மல்லிப்பூ காலனி பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் மணிகண்டன் என்பவர் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாகவும், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நபரை விடுவித்ததாகவும், மீண்டும் அதே நபர் இன்று தொடர்பு கொண்டு சரியாக இரண்டு மணிக்கு குண்டு வெடிக்கும் என தெரிவித்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, வியாசர்பாடிக்கு  விரைந்துள்ள போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொள்வார்கள் அல்லது மனநல பாதிக்கப்பட்ட நபர் என்பதால் மீண்டும் எச்சரித்து இது போன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க பெற்றோரிடம் அறிவுறுத்தவும் போலீசார் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்றாவது முறையாக அதே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தொடர்ச்சியாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே இருப்பு பாதை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மோப்ப நாய்களை கொண்டு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com