திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆதிக்க சக்திகளால் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முடங்கியுள்ளதாக திமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தேன்மொழி குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக திமுகவைச் சேர்ந்த தேன்மொழி பதவி வகித்து வருகிறார்.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆதிக்க சக்திகளால் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக இருந்தும் பட்டியல் சாதி என்பதால் அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்ட நிலையில் சில ஆதிக்க சக்திகளின் சதியால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் பல்லடத்தில் முடக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 3 மாதத்துக்கு ஒரு முறை பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்யவும் அமைச்சர் ஒருவர் காரணமாக உள்ளார் எனவும் சாடினார்.
பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் என்பதால் ஒன்றிய சேர்மன் ஆக இருந்தும் அரசு விழாக்களில் மாவட்ட அமைச்சரால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாகவும், அதே நிலை தொடர்ந்தால் முதல்வரை சந்தித்து முறையிட்டு விட்டு பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் தேன்மொழி கூறியுள்ளார்.