பங்காரு அடிகளார் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு!

Published on
Updated on
1 min read

மாரடைப்பு காரணமாக உயிாிழந்த மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளாாின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறவுள்ளது.  

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருத்துவத்தூரில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயிலில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக  மேல்மருவத்தூரில் உள்ள தனது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பங்காரு அடிகளார், மாரடைப்பால் நேற்று மாலை 6 மணி அளவில் காலமானார். அவரது  திடீர் மறைவு பக்தர்களை  பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. பங்காரு அடிகளாருக்கு லட்சுமி அம்பாள் என்ற மனைவியும் ஜி.பி. அன்பழகன், ஜி.பி. செந்தில் குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர். 

இந்நிலையில் அடிகளார் மறைவுக்கு  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து  வருகிறார்கள். பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

சாதாரண குடும்பத்தில் பிறந்து கோடிக்கணக்கான மக்களின் கடவுளாக திகழப்பட்டவர் பங்காரு அடிகளார். மேல் மருவத்தூரில் தனக்கென  பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.  கல்வித்துறையிலும் கால் பதித்து பள்ளி தொடங்கி பின்னர் கலை கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூாி என ஆரம்பித்து அதில் வெற்றி கண்டார். 

ஆன்மிகத்தில் பெரும் சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் பங்காரு அடிகளார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் கருவறைக்குள் பெண்கள் சென்று பூஜை செய்யும் வழக்கத்தை கொண்டு வந்து புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் அடிகளார்.

மேலும் ஆதிபராசக்தி தொண்டு நிறுவன மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக பங்காரு அடிகளார் செயல்பட்டு வந்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களால் 'அம்மா' என்று பக்தியுடன் அவர் அழைக்கப்பட்டு வந்தார். 

ஆன்மிகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்த இவருக்கு, இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் ஏராளமான  சக்தி வழிபாட்டு மையங்கள் உள்ளன. இவரை நேரில் பார்த்து  தரிசனம் செய்ய பணக்கட்டுகளுடன் தவமாய் காத்துக்கிடப்பார்கள் பக்தர்கள். 

இந்நிலையில் மாரடைப்பால் அடிகளார் மரணமடைந்தார் என்ற செய்தி நாடெங்கும் உள்ள பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரின் ஆன்மிக சேவையை பாராட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு பங்காரு அடிகளாருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com