கடந்த ஒரு மாதமாக மணிப்பூரில் மெய்தேயி சமூகத்தினர் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையில் கலவரம் நடந்து வரும் நிலையில், பாஜக எம்எல்ஏக்கள், மணிப்பூர் மக்கள் அரசின் மீது வைத்திருந்த நம்பிக்கை இழந்துவிட்டதாக, பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஒன்றரை மாதமாக கலவரம் நடந்துகொண்டு இருக்கிறது. அங்கு வசிக்கும் இரு பிரிவு மக்களிடையே எழுந்த சாதிய பிரச்சனை தான், தற்போது மணிப்பூர் மக்கள் நிம்மதியற்று காணப்படுவதற்கு காரணமாகும்.
மணிப்பூரில், 53 சதவீதம் இருக்கும் மெய்தேயி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்தது வந்தனர். ஆனால், மெய்தேயி சமூகத்தினரின் இந்த கோரிக்கைக்கு, குகி சமூக மக்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனாலேயே, குகி சமூகத்தினருக்கும், மெய்தேயி சமூகத்தினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்துவருகிறது.
ஒரு மாதத்திற்கும் மேல் நீடித்து வரும் இந்த கலவரத்தில், இது வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். கலவரத்தின் போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தாங்கள் வசிக்கும் இடம் விட்டு, பாதுகாப்பை தேடி இடம் பெயர்ந்தனர். அதில் கர்ப்பிணி பெண்களும் அடங்குவார்கள். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கலவரத்தின் போது, தீ வைப்பு தாக்குதலிலும் மக்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது, குகி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர் பகுதியில், மத்திய அமைச்சர் ரஞ்சன் சிங்கின் வீட்டை, போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். ஆனால், அச்சயமத்தில், மத்திய அமைச்சர் ரஞ்சன் சிங் அவரது குடும்பத்துடன் டெல்லியில் இருந்துள்ளார்.
மணிப்பூர் மக்கள் இந்நிலையில் இருக்கும் பொழுது, மேலும் கலவரம் வலுவடையாமல் இருப்பதற்காக அம்மாநில அரசு இணைய சேவை துண்டித்தது. சமூக வலைத்தளங்களில் வெறுப்பைத் தூண்டும் விதமாக கருத்துகளை பதிவிடுவதை தடுக்கும் நோக்கத்தில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருந்தது.
பின்னர் நீண்ட நாட்களுக்கு பின், நேற்று மணிப்பூரின் சில பகுதிகளில் மட்டும், நிபந்தனைகளுடன் இணைய சேவையை வழங்க மணிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க, அந்த மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே அரசு ஆட்சி செய்கின்ற போதும், கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவது அரசுக்கு கடினமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 9 பாஜக எம்எல்ஏக்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அக்கடிதத்தில், மணிப்பூர் மக்கள் மாநில அரசின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர். அதை மீட்டெடுக்க, மெய்தேயி மற்றும் குகி சமூகத்தை சேர்ந்த எம்எல்ஏக்களை அழைத்து, கூட்டத்தை நடத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும், மாநிலத்தின் ஒருமைப்பாட்டில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது என எழுதியுள்ளனர்.
இந்தக் கடிதத்தில் மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்த தோக்சோம் ராதேஷ்யாம் சிங், குமகுவைராக்பம் ரணி சிங், எஸ். ரஜேன் சிங், கேபி தேவி, கரம் ஷியாம் சிங், நிஷிகன்ட் சிங் சபம், பிரோஜன் சிங், டி. ரபிந்ரோ சிங் மற்றும் ஓய் ராதேஷ்யாம் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதையும் படிக்க: மதுவுக்கு அடிமையாகி சிறுமியை தெருவில் தவிக்க விட்ட பெற்றோர்!