பா.ஜ.க. மீது அதிரடி கருத்து தெரிவித்த இபிஎஸ் தரப்பின்  சி.பொன்னையன்.......

பா.ஜ.க. மீது அதிரடி கருத்து தெரிவித்த இபிஎஸ் தரப்பின்  சி.பொன்னையன்.......

ஒருகூட்டுக் கிளியாக ஒரு தோப்புக் குயிலாக பாடு.. என அ.தி.மு.க.வும் பா.ஜ.கவும் ஆனந்தக்களிப்பில் துள்ளித்திரிந்தது பழைய காலம் என்று கூறத்தக்க அளவுக்கு சமீபமாக பாஜக குறித்து அதிமுகவின் முன்னணி தலைவர்கள் உதிர்க்கும் கருத்துக்கள் பகீர் ரகமாக இருக்கிறது. 

அந்தரத்தில் மிதக்கும் பாஜக:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர் செல்வம் சார்பில் செந்தில்முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க. வின் நிலைப்பாடு அந்தரத்தில் மிதக்கிறது. 

திட்டவட்ட அறிவிப்பு:

பா.ஜ.க. வேட்பாளரை அறிவித்தால் எங்கள் வேட்பாளரை வாபஸ் வாங்கி விடுவோம் என ஓபிஎஸ் கூறியிருந்தார். ஆனால் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் பாஜக களமிறங்கினாலும் எங்கள் வேட்பாளரை திரும்ப பெற மாட்டோம் என அதிமுகவின் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

வட இந்தியாவில்..:

இதன் உச்சக்கட்டமாக பேசிய அதிமுகவின் மூத்த நிர்வாகியான பொன்னையன், பா.ஜ.க. வடஇந்தியாவில் கூட்டணிக் கட்சிகளை எவ்வாறு வீழ்த்தி ஆட்சிக்கு வந்தனர் என்பது அனைவருக்கும் தெரியும் என குறிப்பிட்டுள்ளார். 

இந்தி திணிப்பு:

பொன்னையன் இப்படி கூறினால், கடந்த வாரம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பா.ஜ.க.வில் இருந்து வருபவர்கள் இந்தியை திணிக்கப் பார்க்கிறார்கள் என கூறி அதிர்வலையை கிளப்பியிருந்தார். 

இருட்டடிப்பு செய்யப்பட்ட அண்ணாமலை:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்காக திறக்கப்பட்ட தேர்தல் பணிமனையில் பாஜகவின் பெயர், அண்ணாமலையின் புகைப்படங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில், சி.வி.சண்முகம், பொன்னையன் போன்றவர்களின் பேச்சுக்கள், கூட்டணிக்குள் குழப்பமா என்ற கேள்வியை நாட்டு மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  அதானியின் வழக்கை விசாரிக்கும் அதானியின் கூட்டாளிகள்.....மொய்த்ரா கூறுவதென்ன?!!!