ஆணவ கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள்..... உயர்நீதிமன்றம் உத்தரவு!!!
ஆணவ கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பொது வெளியில் நடத்தப்பட்டால் தான் பொதுமக்களுக்கு அது சென்றடையும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
இதுதொடர்பாக சங்கர் சமூக நீதி அறக்கட்டளையின் நிறுவனரான கவுசல்யா தாக்கல் செய்த மனுவில், தன்னை சாதி மறுப்பு திருமணம் செய்ததால் தனது கணவரான உடுமலை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்டதை அடுத்து, சாதி மறுப்பு திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டங்கள் நடத்தி வருவதாக கூறியுள்ளார்.
இதன் ஒருபகுதியாக சங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மார்ச் 12ஆம் தேதி மாலை உடுமலை குமாரமங்கலம் பேருந்து நிலையம் அருகே கூட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்ததாகவும், அதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், சங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த கடந்த 7 ஆண்டுகளாக அனுமதியளிக்கப்படவில்லை எனவும், உள்ளரங்க கூட்டமாக நடத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தை நடத்துவதில் தங்களுக்கு விருப்பமில்லை என சங்கரின் சகோதரர் மனு அளித்துள்ளதாகவும், அப்பகுதியில் சங்கரின் உறவினர்கள் உள்ளதாலும், சங்கரின் குடும்பத்தார் மூலம் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பிருக்கலாம் என்பதாலும் அனுமதி அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, ஆணவ கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பொது வெளியில் நடத்தப்பட்டால் தான் பொதுமக்களுக்கு அது சென்றடையும் என தெரிவித்த நீதிபதி, நினைவேந்தல் கூட்டம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: யோகி பாபு படத்துக்கு தடை விதித்த நீதிமன்றம்...!!!