தனியார் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் 'ஆவின் கேக்'...இல்லம் தேடி டெலிவரியாம்...!

தனியார் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் 'ஆவின் கேக்'...இல்லம் தேடி டெலிவரியாம்...!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளையொட்டி கேக் தயாரிக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கி உள்ளது ஆவின் நிர்வாகம். மக்கள் மனங்களை கொள்ளை கொள்ளும் வகையில் புதிதாகவும், சுகாதாரமாகவும் தயாராகும் ஆவின் கேக், தயாரிக்கப்படும் முறை மற்றும் அதன் சுவை குறித்து இந்த செய்திக்குறிப்பில் விரிவாக பார்க்கலாம்...

ஆவின் கேக் தயாரிப்பு:

தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் பொதுமக்களின் வழக்கமான பலகாரங்களில் ஆவின் பொருட்கள் இடம் பிடித்திருப்பது போல், இனி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளின்போதும் ஆவின் தயாரிப்புகள் தவிர்க்க முடியாத இடம்பெறத் தொடங்கி உள்ளது. 

ஆம், தீபாவளி பலகாரங்கள் மூலம் மக்கள் மனம் கவர்ந்த ஆவின், தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும் மக்கள் மனங்களில் இடம்பிடிக்கும் வகையில் புதிய முயற்சியாக கேக் தயாரிக்கும் பணியில் களம் இறங்கி உள்ளது.

தனியார் கேக் வகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஆவினில் 12 வகையான  கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. பிளாக் பாரஸ்ட், சாக்கோ ட்ரிபில், ஸ்ட்ரா பெரி, பைனாப்பில், ஒயிட் ஃபாரஸ்ட், பட்டர்ஸ் காட்ச், ரெயின்போ, பிளாக்கரண்ட், ரெட் வெல்வெட், டெத் பை சாக்லேட் உள்ளிட்ட வகையான கேக்குகள் அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளன.

இதையும் படிக்க: கொரோனா பரவல் இடையே...உலகம் முழுவதும் கோலாகல கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்...!

சூடுபிடிக்க தொடங்கிய கேக் பணிகள்:

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்குவதால் கேக் தயாரிப்பு பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உரிய அளவில் கொடுக்கப்பட்டுள்ள தரத்தில் கலவையை கலந்து, 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கேக் பேக்கிங் செய்யப்படுகிறது. சம அளவில் வெட்டுவதும், உரிய பதத்தில் கிரீம் தடவுவது, சாக்லேட்டை கொண்டு அழகு படுத்துவது, குளிரூட்டும் அறையில் பதப்படுத்துவது என பணியாளர்கள் பம்பரம்போல் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். 

ஆவின் நிர்வாகம் மூலம் கேக் விற்பனை செய்யப்படுவதால் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கையுறை, தலைக்கவசம் போன்றவற்றை அணிந்துக்கொண்டு பணியாளர்கள் கேக் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நவீன இயந்திரங்கள் மூலம் கேக் தயாரிக்கப்படுவதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான கேக் பண்டல்கள் ஆவின் பார்லருக்கு பயணப்பட்ட வண்ணம் உள்ளது.

மலிவான விலையில் ஆவின் கேக்:

விற்பனையில் தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் மலிவான விலையில், நிறைந்த தரத்தில் ஆவின் கேக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஏழை - எளிய மக்கள் எளிதில் வாங்கும் வகையில் 80 கிராம், 400 கிராம், 800 கிராம் என விற்கப்படும் கேக்குகளை, அதிகம் கொள்முதல் செய்ய விரும்புவோர், ஆவின் வழங்கியிருக்கும் தொலைபேசி எண்ணில் அழைத்தால் வீடுதேடி கேக் கொண்டு வரப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அனைத்து தயாரிப்புகளையும் போல் ஆவின் தயாரிப்பில் வெளிவரும் கேக், மக்கள் மனதில் நீங்கா இடம் பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.