கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஷிங்கோன் தொகுதியில், சாமி தரிசனம் செய்து மக்களோடு மக்களாக வரிசையில் நின்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தனது ஜனநாயகக் கடமையாற்றினார். காலை 11 மணி நிலவரப்படி 21 சதவீத வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அவரது பதவிக்காலம் வருகிற 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 37 ஆயிரத்து 777 இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்காளர்கள் காலை முதலே தங்களது ஜனநாயகக் கடமைகளை ஆற்றி வருகின்றனர்.
அந்த வகையில், ஷிங்கோனில் காயத்ரி தேவி கோயிலில் சாமி தரிசனம் செய்தபின், மக்களோடு மக்களாக நின்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வாக்களித்தார். அதேபோல், ஷிகாரிபுராவில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவும், ஷிவமோகாவில் பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பாவும், பெங்களூருவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
கனகபுரா தொகுதியில் சாமிதரிசனம் செய்தபின், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வாக்கு செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கேஸ் சிலிண்டர்களை ஒருமுறை பார்த்துவிட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
நடிகர் பிரகாஷ்ராஜ், கணேஷ், ரமேஷ் அரவிந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர். வருணா தொகுதியில் சாமி தரிசனம் செய்தபின் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தனது வாக்கினை பதிவு செய்தார். ராமாநகராவில் முன்னாள் முதலமைச்சரும், ஜே.டி.எஸ் தலைவருமான குமாரசாமி தனது குடும்பத்தினருடன் வாக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
சாம்னூரில் தேர்தல் தலைமை அதிகாரி பாஜகவுக்கு வாக்களிக்க மக்களை தூண்டியதால், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதாக காங்கிரஸ் எம்எல்ஏவும், சித்தப்பூர் வேட்பாளருமான பிரியங்க் கார்கே புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 21 சதவீத வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது.