இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு ஒத்துப்போகுமா நமீபியா சிறுத்தைகள்?!!

இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு ஒத்துப்போகுமா நமீபியா சிறுத்தைகள்?!!
Published on
Updated on
2 min read

ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட எட்டு சிறுத்தைகள் இந்திய மண்ணில் திறந்து விடப்பட்டுள்ளது. 1952 இல் முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறுத்தைகள் சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன.  மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் நமீபியா சிறுத்தைகளை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார். இந்த சிறுத்தைகளை கொண்டு வர நமீபியாவுடன் இந்தியா சிறப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் பெரிய மாமிச உண்ணி என்று அழைக்கப்படும் சிறுத்தை, இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு எப்படி ஒத்துப்போகும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

பராமரிப்பு:

சிறுத்தைகள் 30 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும் எனவும் அப்போது அவை கூண்டுக்குள் வைத்து பாதுகாக்கப்படும் எனவும் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவைகளின் உடல்நிலை மற்றும் பிற நடவடிக்கைகள் கூண்டுக்குள் வைத்தே கண்காணிக்கப்படும் எனவும் முப்பது நாட்களுக்குப் பிறகு அனைத்து சிறுத்தைகளும் காட்டுக்குள் விடப்படும் எனவும் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

சிங்கங்களுக்கான இடமா?:

சிறுத்தைகளை வளர்ப்பதற்காக குனோ தேசிய பூங்கா பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சரணாலயம் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே கிர் ஆசிய சிங்கங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டது எனவும் ஆனால் இந்த சிங்கங்களை கிரில் இருந்து குனோவிற்கு கொண்டு வர முடியவில்லை எனவும் பூங்கா நிர்வாகிகள் கூறியுள்ளனர். சிங்கங்களின்  இடமாற்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் இங்கு செய்யப்பட்டிருந்தது எனவும் ஆனால் தற்போது சிறுத்தைகளின் பராமரிப்பிற்காக திறந்து விடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆய்வு:

குனோவைத் தவிர, மத்தியப் பிரதேசத்தில் உள்ள நௌரதேஹி வனவிலங்கு சரணாலயம், ராஜஸ்தானில் உள்ள பைஸ்ரோத்கர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஷாகர் ஆகிய இடங்களிலும் அரசாங்கம் சிறுத்தைகள் வளர்வதற்கான மதிப்பீடுகளை ஆய்வு செய்துள்ளனர் விஞ்ஞானிகள்.  ஆய்விற்குப் பிறகு, சிறுத்தைகளை பராமரிப்பதற்காக குனோ பூங்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. 

பராமரிப்பு செலவு:

சிறுத்தைகளுக்காக 2021-22 முதல் 2025-26 வரை ரூ.38.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதில் சிறுத்தைகளை கொண்டு வருவதற்கான பட்ஜெட்டும் அடங்கும்.

விஞ்ஞானிகள் கவலை:

சிறுத்தைகளை வைத்திருப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து நிபுணர்கள் மிகவும் கவலை தெரிவித்துள்ளனர். வனவிலங்கு ஆய்வு மையத்தின் சிறப்பு இயக்குநர் உல்லாஸ் காரந்த் கூறுகையில், ”நான் இந்தத் திட்டத்திற்கு எதிரானவன் அல்ல.  ஆனால் இந்தியாவின் மையத்தில் உள்ள தேசியப் பூங்காவில் சிறுத்தைகளை அறிமுகப்படுத்துவது கவலைக்குரியது.  ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் 360 வனவிலங்குகள் வசிக்கும் இடத்தில் சிறுத்தைகள் வளர்க்கப்படுகின்றன. இதனால் சிறுத்தைகளின் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

 வனவிலங்குகள் பாதுகாப்பு விஞ்ஞானி அர்ஜூன் கோபாலசாமி கூறுகையில், ”சுதந்திரமான சூழலில் வாழும் சிறுத்தைகள் இப்போது பாதுகாக்கப்பட்ட திறந்த வெளியில் வாழ்வது எளிதல்ல. ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்தியாவில் சிறுத்தைகள் அழிந்ததற்குப் பின்னால் சில காரணங்கள் உள்ளன. பெருகிவரும் மக்களின் எண்ணிக்கையும், சுதந்திரமான வனப் பகுதியின் மீதான அழுத்தம் அதிகரிப்பதும் அதன் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். கடந்த 70 ஆண்டுகளில், இந்த நிலை முன்னேறவில்லை, ஆனால் மோசமாகிவிட்டது. இவ்வாறான நிலையில், இந்த விலங்குகளை கொண்டு வருவதற்கான முயற்சி எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர்:

சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.  அதில், இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தை கூறியுள்ளார்.  சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவது தவறுகளை சரிசெய்வதற்கான ஒரு படியாகும்.  இந்த உயிரினங்கள் ஒரு காலக்கட்டத்தில் இந்தியாவில் முற்றிலுமாக அழிந்துவிட்டன.

பல ஆண்டுகளாக, இந்தியா இதுபோன்ற பல உயிரினங்களை காப்பாற்றியும் உள்ளது. புலிகள் முதல் சிங்கங்கள், ஆசிய யானைகள், முதலைகள் மற்றும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் ஆகியவை இதில் அடங்கும். சிறுத்தைகளை இந்தியாவிற்கு கொண்டு வருவது நாட்டின் வரலாற்று பரிணாம சமநிலையை பேணுவதற்கான ஒரு முக்கியமான முயற்சியாக இருக்கும் என்றும் பூபேந்திர யாதவ் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com