ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் வீட்டில் விடிய விடிய பத்து மணி நேரத்திற்கு மேலாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை நீடித்து வருகிறது.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக உள்ளவர் சிவக்குமார் இவர் ஈரோடு பெரியார் நகரில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் நகராட்சியில் ஆணையாளராக சிவக்குமார் பணியில் இருந்தபோது பதிவு செய்யப்பட்ட ஒரு லஞ்ச வழக்கு தொடர்பாக ஈரோட்டில் அவர் வசிக்கும் வீட்டில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.
இதுபற்றிய தகவல் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை ஈரோடு பெரியார் நகரில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் வீட்டுக்கு வந்தனர். அப்போது ஆணையாளர் சிவக்குமார் சென்னையில் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு வீட்டில் சோதனை நடத்துவது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் கொடுத்தனர். போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அவர் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு உடனடியாக புறப்பட்டார்.
மதியம் 3.50 மணியளவில் அவர் ஈரோட்டுக்கு வந்தடைந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு தயாராக நின்றிருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் போலீஸ் ஆறுமுகம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் நுழைந்தனர்.
உடனடியாக வீட்டின் நுழைவு வாயில் கதவு மூடப்பட்டது. வீட்டுக்குள் சென்ற போலீசார் அனைத்து ஆவணங்களையும் எடுத்து சோதனை நடத்தினார்கள். அப்போது கணக்கில் வராத பணம் உள்ளதா என்றும் போலீசார் வீடு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வீட்டின் அனைத்து அறைகளையும் சோதனையிட்ட போலீசார் வீட்டின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரையும் சோதனையிட்டனர்.
தொடர்ந்து, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விடிய விடிய பத்து மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை நீடித்து வருகிறது.
இதையும் படிக்க: வெளியிடப்படாத தேர்வு முடிவு.... உயர்த்தப்பட்ட பணியிடங்கள்!!