பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு; டிச.3-ல் உண்ணாவிரதம் அறிவிப்பு!

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு; டிச.3-ல் உண்ணாவிரதம் அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

பரந்தூர் விமான நிலையம் அமைக்க நிலம் எடுக்க நிர்வாக அனுமதி வழங்கிய தமிழக அரசை கண்டித்து டிசம்பர் 3-ம் தேதி ஏகானபுரம் கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என பரந்தூர் விமான நிலைய  எதிர்ப்பு கூட்டியக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். 

சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு மத்திய மாநில அரசுகள் பணிகளை துவக்கி உள்ளது.

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் விளைநிலங்கள் குடியிருப்புகள் நீர்நிலைகள் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படுவதாக கூறி கிராம மக்கள் 490வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கிராம மக்களின் போராட்டங்களை பொருட்படுத்தாமல் தமிழக அரசு விமான நிலையம் அமைப்பதற்கான நிலங்களை கையப்படுத்துவதற்கு நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டு உள்ளது.

தொடர்ந்து 491 வது நாளாக ஏகனாபுரம் கிராமத்தில் பரந்தூர் பசுமைவழி விமான நிலையம் அமைக்க கூடாது என கோஷங்களை எழுப்பி கிராம மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விமான நிலையம் அமைக்க நிலம் எடுப்பதற்கான அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்ட தமிழக அரசை கண்டித்து வரும் டிசம்பர் 3-ம் தேதி ஏகனாபுரம் கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும், அதற்கு முன்னதாக நவம்பர் 30 நாளை முதல் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பாமல் புறக்கணிக்க போவதாகவும் முடிவெடுத்து, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பினர் அறிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக் களம் சூடி பிடிக்க துவங்கி உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com