மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோயில்...!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. 

நினைத்தாலே முக்தி தருவதும் அக்னித் தலமும் ஆன திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வாக மகாதீபம் இன்று ஏற்றப்படவுள்ளது. இதற்கு முன்னதாக ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் வகையில், அண்ணாமலையார் சன்னதியில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். கார்த்திகை தீபத்தையொட்டி அண்ணாமலையார் கோயில் மின்னொளியில் ஜொலித்தது.

இதற்கிடையில் மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபத்தை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதிக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மகா தீபக் கொப்பரை நேற்று மாலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அதில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 4 ஆயிரத்து 500 கிலோ நெய் மற்றும் ஆயிரத்து 150 மீட்டர் காடா துணியால் ஆன திரி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மகாதீப தரிசனத்திற்காக பல்வேறு மாவட்டங்கள் மற்றுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதற்காக 2 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடாக 14 ஆயிரம் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.