தமிழ்நாட்டின் 35 அமைச்சர்களில் 11 பேர் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் திமுக எதைச் சொல்லி வாக்கு சேகரிக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், அண்ணாமலை, என் மண் என் மக்கள் 3-ம் கட்ட நடைபயணத்தை தொடங்கினாா். அப்போது அவருக்கு திரளான கட்சி நிா்வாகிகள் திரண்டு வந்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சா்கள் பியூஸ்கோயல், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை மேடையில் பேசுகையில், நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சியை பாஜகாவால் மட்டும் தான் தர முடியும் எனவும், வரும் நாடாளுமன்ற தோ்தலில் பாஜகவை வெற்றி பெற செய்து பிரதமா் மோடியை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர வைக்க வேண்டும் எனவும் தொிவித்தாா்.
மேலும், கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் சுமாா் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டிய அவா், நீலகிரி தொகுதி எம்பியான ஊழல்வாதி ஆ.ராசாவை அப்பதவியில் அப்புறப்படுத்த வேண்டும் என்றாா்.
தொடா்ந்து பேசிய அண்ணாமலை, கோவையில் 580 கோடி ரூபாய் செலவில் இஎஸ்ஐ மருத்துவமனை, 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் விமான நிலை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து ஓட்டு கேட்போம், ஆனால் திமுகவினா் எதனை வைத்து ஓட்டு கேட்பாா்கள் என கேள்வி எழுப்பினாா்.
திமுக அமைச்சரவையில் உள்ள 35 அமைச்சர்களில் 11 அமைச்சர் மீது வழக்கு உள்ளது என விமா்சித்த அவா் திமுகவினா் அளித்த பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினாா்.