தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணத்தை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குகிறார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அண்ணாமலை பொறுப்பேற்று 1 வருடம் 7 மாதம் ஆகியுள்ளது. பல்வேறு ஊர்களில் பல்வேறு விதமான நிகழ்வுகளின் பங்கேற்றாலும் அவர் சுற்றுப்பயணம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதம் திமுகவின் மூத்த தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல முதலமைச்சரின் மீதும் 200 கோடி ரூபாய் ஊழல் புகாரையும் முன் வைத்திருக்கிறார் அண்ணாமலை.
இதற்கிடையே அண்ணாமலை தான் பயன்படுத்தும் ரபேல் வாட்ச் குறித்து அவர் வெளியிட்ட தகவலும் சர்ச்சையும் கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இந்த வெளியீட்டு நிகழ்வில் பேசிய அண்ணாமலை இதற்கு முன் ஆட்சியில் அமர்ந்த அனைவரையும் கேள்வி கேட்போம் என்று பேசியிருந்தார். ஊழலுக்கு எதிராக பயணிப்போம் என்றும் திமுகவை பற்றி தொடர்ச்சியான கேள்விகளை முன் வைப்போம் என்றும் கூறினார்.
இப்படி பரபரப்பு கிளப்பி விட்டு கர்நாடக தேர்தலில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார் அண்ணாமலை. இந்த சூழலில் தான் அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்தித்து பேசி இருக்கிறார்கள் இந்த சந்திப்பின்போது அண்ணாமலையும் உடன் இருந்திருக்கிறார். இந்த சந்திப்பில் அதிமுக பாஜக இடையே கூட்டணியை உறுதி செய்து இருப்பதாகவே கருதப்படுகிறது.
ஆகையால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த சுற்றுப்பயணம் பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் பாஜகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த சுற்றுப் பயணத்தின் போது தமிழகம் முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சந்திப்பு, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதியிலும் உள்ள முக்கிய நபர்களை சந்திக்கிறது ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்ப உறுப்பினர்கள், விவசாய பெருமக்கள், தொழில் முனைவோர், இளம் வயது சாதனையாளர்கள் ஆகியோரை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார்
இதற்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன வரும் பத்தாம் தேதி கர்நாடக தேர்தலில் வாக்கு பதிவு முடித்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பிறகு அங்கே அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதன் பின்னர் தமிழகம் வரும் அண்ணாமலை, ஜூன் முதல் வாரத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இதற்கான அறிவிப்பு இரண்டு ஒரு வாரத்தில் வெளியிடப்பட இருக்கிறது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது பாரதிய ஜனதா கட்சி 9 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு செய்த நன்மைகள் என்ன கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக தேர்தல் வாக்குறுதியில் சொல்லிய திட்டங்களை, செய்யாமல் இருப்பதை சுட்டிக்காட்டி அண்ணாமலை மக்களை சந்திக்க உள்ளார். மேலும் திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை முன்வைத்து அவரது சுற்றுப்பயணம் இருக்கும் என சொல்லப்படுகிறது.