அண்ணா ஒரு சகாப்தம்.... திமுக என்னும் மூன்றெழுத்து செழித்தோங்க காரணமான மூன்றெழுத்து!!!

அண்ணா ஒரு சகாப்தம்.... திமுக என்னும் மூன்றெழுத்து செழித்தோங்க காரணமான மூன்றெழுத்து!!!

புலவர், கவிஞர், அறிஞர் எனப் பல பெயர்களைத் தாங்கிய சான்றோர்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் புகழ் பெற்றிருந்தாலும் பேரறிஞர் என்றதும் நினைவுக்கு வரும் ஒரே பெயர் அண்ணா. தமிழ்த்தாயின் தலைமகன் அண்ணாவின் 54-வது நினைவு நாளில் அவரை நன்றியுடன் நினைவுகூர்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு....

காஞ்சிபுரம் தந்த பகவலவன்:

தமிழ்நாட்டிற்கு காஞ்சிபுரம் ஆன்மிகத்துக்கு ஒரு மடத்தை மட்டும் தரவில்லை.  அரசியலுக்கு ஒரு மன்னனையும் கொடுத்தது.  மகளிர் ஆசை கொள்ள பட்டை மட்டும் தரவில்லை.  மறத்தமிழர்கள் விழிப்புகொள்ள ஒரு பகலவனையும் கொடுத்தது. 

தீந்தமிழின் மரபுவாசலைக் காக்க:

அண்ணாதுரை என்று பெயர் பெற்ற அந்த அருந்தமிழ்க் காற்று, காஞ்சிபுரத்தில் இருந்து தமிழ்நாட்டைச் சீர்தூக்க 1909-ம் ஆண்டு பிறந்தது.  தீந்தமிழின் மரபுவாசலைக் காத்த தலைவனை வரகுவாசல் சுமந்தது. அதன் புழுதிகளில் விளையாடிக் களித்த அண்ணாதுரை, மண் தன்மேல் படிந்ததுபோலவே தன்னை மண்ணுடன் பதித்துக் கொண்டார்.  நல்ல பெயரை வாங்க வேண்டும் என்று பெற்றோர் குழந்தைகளுக்கு அறிவுறுத்துவார்களே, அதை மெய்ப்பிக்க தமிழ்த்தாய் மகிழ்ந்து களித்த நிலத்திற்குத் ஜனவரி 14-ம் தேதி 1969-ம் ஆண்டு ‘தமிழ்நாடு’ என்று உண்மையிலேயே நல்ல பெயர் வாங்கி கொடுத்தார் அண்ணா. 

பழமைவாதத்தை எதிர்த்து:

பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் போர்வாளாக அண்ணா விளங்கினார்.  அரசியல் பாடத்தைப் பெரியாரிடம் அவர் கற்ற போதிலும், அன்பில் இறைவனைக் காணும் தத்துவத்தில் வேறுபட்டார். அதனால் அவர் வளர்ந்த நீதிக்கட்சிப் பாசறையை நீங்கினார்.  திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, தமிழரின் முன்னேற்றத்தைத் தம் கடமையாகக் கொண்டார்.  தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அண்ணா படித்தார்.  அதில் மக்கள் முன்னேற்றத்திற்கு ஒவ்வாத பழமைவாதத்தைத் துணிந்து எதிர்த்தார்.  பேச்சாற்றலில் தனித்துவத்தைக் காட்டி அரங்கங்களில் கோலோச்சிய அரசர் பேரறிஞர் அண்ணா.

தீச்சொற்களை சுட்டெரித்த..:
 
சோம்பலைச் சுட்டெரிக்கும் தீச்சொற்களை உதிர்த்த அண்ணாவின் நாவு சொல்லித் தந்த மந்திரமான ”கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்பதுதான் இன்றளவும் உழைக்கும் மக்களின் உயிர்த்துடிப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது. 

தத்துவ குரு:

”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று போதித்த தத்துவ குரு அண்ணா.  இந்தி திணிக்கப்பட்டபோது போர்க்கொடி தூக்கி அதன் ஆதிக்கத்தைத் தவிடுபொடி ஆக்க தீப்பொறி கசிந்த தீப்பந்தம் அண்ணா. எதிர் தரப்பினரும் விரும்பிக் கேட்கும் அளவு கண்ணியமும் கவித்துவமும் மிக்க பேச்சுக்கனல் அண்ணா. இருமொழித் திட்டத்தை ஈடேற்றி, மும்மொழிக் கொள்கையின் முனை உடைத்த மொழிப்பற்றாளன் அண்ணா. 

வலுவான அச்சாரம்:

திமுக என்னும் மூன்றெழுத்து தமிழ்நாட்டில் இன்று நீக்கமற நிறைந்திருப்பதற்கு, தம் அரசியல் சாதுர்யத்தால் பெரும் அச்சாரம் இட்டது அண்ணா என்னும் மூன்றெழுத்துதான். 

காரியகர்த்தா:

திராவிட நாட்டுக் கொள்கையில் முதலில் தீர்க்கமாக இருந்த அண்ணா, பின்னர் மாநில சுயாட்சியை வலியுறுத்தி, இன்றைக்கு நமக்கிருக்கும் உரிமைகளைப் பெற்றுத் தந்தார்.  கதை, கவிதை, நாடகம், சினிமா, பாடல், கட்டுரை, மேடைப் பேச்சு என்று அண்ணா தொடாத இலக்கிய வகைமையே கிடையாது. தனக்குள் சுடர்விட்டு எரிந்த கொள்கை நெருப்பை மக்களிடம் சேர்க்க அனைத்து ஊடகங்களையும் கச்சிதமாக பயன்படுத்திய அண்ணா – காரியகர்த்தா. 

புகழுடன் பூவுலகு:

தோன்றிற் புகழுடன் தோன்றுக என்று கூறிய வள்ளுவரின் வாக்கினை ஒருபடி மேலேற்றி, தாம் மறைந்தபோதும் அழியாப் புகழுடன் பூவுலகைப் பிரிந்தார் அண்ணா.  உலக அளவிலேயே ஒருவரது இறுதி ஊர்வலத்தில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் கலந்துகொண்ட நிகழ்வு, 53 ஆண்டுகளுக்கு முன், 1969-ம் ஆண்டு அண்ணாவை வீர சொர்க்கத்திற்கு வழியனுப்பிய  இதே நாளில்தான் நடந்தது.  

ஏற்றி வைத்த விளக்கு:

குறுகிய நேரமே சுடர்ந்தாலும் குன்றின்மீது ஏற்றி வைத்த விளக்கு ஊருக்கே ஒளி தருவதுபோல் அண்ணா விதைத்துச் சென்ற நெருப்பின் பயத்தில் அச்சுறுத்தும் இருள் இன்றும் நெருங்க பயந்து அடங்கி நிற்கிறது.  அந்தச் சூரியனின் குலம்தான் இன்று தமிழ்நாட்டில் விடியலைக் கொண்டுவர உழைத்துக் கொண்டிருக்கிறது. 

அண்ணா சாலை, அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா சதுக்கம், அண்ணா நகர் என இனி எக்காலத்திலும் தமிழ்நாட்டையும் அண்ணாவையும் பிரிக்க முடியாதபடி ஆழ விதையாய் ஆகி, மெரினாக் கடற்கரையில் உறங்குகிறார் அண்ணா.  கடலைத் தாண்டி வரும் காற்றை நுகர்ந்து பாருங்கள், அது வீசும் சுறுசுறுப்பின் வாசம் பேரறிஞர் அண்ணாவுடையது.  அது தரும் இனமான உப்பு, நம் வாழ்வில் நிச்சயம் சேர்த்துக்கொள்ள வேண்டியது. 

அண்ணாவைப் போற்றுவோம்!

-நப்பசலையார்

இதையும் படிக்க:   காலமானார் பழம்பெரும் இயக்குநர் விஸ்வநாத்...!