காங்கிரஸ் கட்சி குறித்து பேச உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தகுதியில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சிவகாசி முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாநகராட்சி மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ்பிரியா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் காங்கிரஸ் எம் பி மாணிக்கம் தாகூர் மாணவ, மாணவியருக்கு வழங்கினார்.
பின்னர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, காங்கிரஸ் கட்சி 5 தலைமுறைகளை கண்ட 128 ஆண்டு கால கட்சி. 5 தலைமுறை குடும்பத்தினர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். ஆங்கிலேயர்களுக்கு துதி பாடாமல், அடிமையின்றி, இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்ட கட்சி காங்கிரஸ். ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்த ஆர். எஸ். எஸ், இந்து மகாஜனசங்கம், பாரதிய ஜன சங்கம் போல இல்லாமல் இந்தியாவிற்காக போராடியக் கட்சிதான் காங்கிரஸ் எனக் கூறினார்.
இந்தியாவுக்காக போராடி உயிர் நீத்த, தியாகம் செய்த கட்சிதான் காங்கிரஸ். இந்தியாவை பலமான நாடாக 70 ஆண்டுகள் தொடர்ந்து போராடி முயற்சித்த கட்சி காங்கிரஸ். எனவே காங்கிரஸ் கட்சி குறித்து பேச உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தகுதியில்லை என தெரிவித்தார்.
கிரிக்கெட் மட்டையை தொடாத அவரது மகன் ஜேசாவுக்கு, இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் பதவி கொடுத்து தலைவராக்க முயற்சி எடுத்து வருபவர் அமித்ஷா. பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரிக்கெட் வாரியத்தை தன் மகன் கையில் கொடுத்த அமிர்தஷாவுக்கு காங்கிரஸ் பற்றி பேச அருகதை இல்லை என குற்றம் சாட்டிய அவர், தொடர்ந்து நடந்து வரும் ரயில் விபத்திற்கு கள நிலவரம் பற்றி தெரியாமல், ரயில்வே துறை அமைச்சராக நீடிக்கும் வைஷ்ணவ் தான் காரணம் என தெரிவித்தார். மேலும், அவர் ஒவ்வொரு நிமிடமும் ரயில்வே துறை அமைச்சராக தொடர்ந்து நீடிப்பது ரயில்வே துறைக்கு பெரும் ஆபத்தாகும் எனவும் அவர் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.
இதையும் படிக்க:ஜெயிலர் படத்தில் RCB ஜெர்சி; காட்சிகளை நீக்க உத்தரவு!